Published:Updated:

`இனி அவர் இந்திய குடிமகன் இல்லை' - தெலங்கானா எம்.எல்.ஏ-வை அதிரவைத்த மத்திய உள்துறை!

எதிர்த்துப் போட்டியிட்ட ஆதி சீனிவாசன் என்பவர்தான் முதன்முதலில் இவரது குடியுரிமை மீது சந்தேகம் எழுப்பி வழக்கு தொடர்ந்தார்.

சென்னாமணினி ரமேஷ்
சென்னாமணினி ரமேஷ்

உண்மையை மறைத்து இந்திய அரசை தவறாக வழிநடத்தினார் எனக் கூறி தெலங்கானா எம்.எல்.ஏ சென்னாமணினி ரமேஷ் இந்திய குடியுரிமையை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. ஒருங்கிணைந்த ஆந்திராவின் கம்யூனிஸ்ட் தலைவர் மறைந்த சென்னாமணினி ராஜேஸ்வர ராவ்வின் மகன் சென்னாமணினி ரமேஷ். இவர் தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ்வின் நெருங்கிய உறவினரும்கூட. இவரது குடியுரிமையைத்தான் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெமுலாவாதா என்ற தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார்.

சென்னாமணினி ரமேஷ்
சென்னாமணினி ரமேஷ்

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆதி சீனிவாசன் என்பவர்தான் முதன்முதலில் இவரது குடியுரிமை மீது சந்தேகம் எழுப்பி வழக்கு தொடர்ந்தார். அதற்குக் காரணம் சென்னாமணினி ரமேஷ் பிறப்பால் ஒரு இந்திய குடிமகனாக இருந்தாலும் ஜெர்மனிக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பேராசிரியராகப் பணிபுரிந்தார். ஜெர்மனிப் பெண்ணைத் திருமணம் செய்தவர் அந்நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்காக 1993-ல் தனது இந்திய குடியுரிமையை கைவிட்டார். பின்னர், இந்தியாவில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன் 2008-ல் இந்திய குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்தார்.

இந்திய குடியுரிமைச் சட்டம் 1955-ன் 5(1)( எப்) சட்டத்தின்படி ஏற்கெனவே இருந்த இந்திய குடியுரிமையை இழந்தவர் ஓர் ஆண்டுக்காலம் இந்தியாவில் வசித்த பிறகு, மீண்டும் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியும். இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி குடியுரிமை கேட்டு இருந்தார் ரமேஷ். ஆனால், 365 நாளுக்குப் பதிலாக 96 நாள்கள்தான் இந்தியாவில் ரமேஷ் வசித்தார் எனக் கூறி ஆதி சீனிவாசன் குற்றம் சாட்டி புகார் கொடுத்திருந்தார். பின்னர் நீதிமன்றம், உள்துறை அமைச்சகம் என மாறி மாறி விசாரணை நடந்த நிலையில 2017-ம் ஆண்டே குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. பின்னர் ரமேஷ் மேல்முறையீடு செய்ததால் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேல்முறையீட்டில்,`உள்துறை அமைச்சகமே முடிவெடுக்க முடியும்' என நீதிமன்றம் கூற தற்போது மீண்டும் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னாமணினி ரமேஷ்
சென்னாமணினி ரமேஷ்

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ``விண்ணப்பம் செய்வதற்கு முன்பு அவர் ஒரு வருடம் இந்தியாவில் வசிக்கவில்லை என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தவில்லை. தவறான ஆவணங்களைக் காட்டி அரசை தவறாக வழிநடத்தி இருக்கிறார். இனி ரமேஷ் இந்தியாவின் குடிமகன் அல்ல என்பதும், இங்கு எந்தச் சலுகைகளும் பெற முடியாது. இந்த நாட்டுக்குப் பயணம் செய்ய சென்னமணினி ரமேஷ் கட்டாயமாக விசா பெற வேண்டும். அவர் சட்டத்துக்கு இணங்க வேண்டும். ரமேஷ் தற்போது இந்தியாவில் எந்தவொரு பதவியையும் ஏற்கும் நிலையில் இல்லை" எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போது ரமேஷ் தனது குடியுரிமையையும் எம்.எல்.ஏ பதவியையும் இழந்துள்ளார். நீண்ட காலமாக நடந்துவந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.