Published:Updated:

15 ஆண்டுகளாக வீடு திரும்பாத பெண்; உதவிய ஃபேஸ்புக்! - தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

பவானி
பவானி

தெலங்கானாவைச் சேர்ந்த இளம் பெண், 15 ஆண்டுகள் கழித்து ஃபேஸ்புக்கின் உதவியால் தன் பெற்றோரைக் கண்டுபிடித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், வீட்டு வேலை செய்துவந்துள்ளார் பவானி என்ற 19 வயது பெண். இவர், சமீபத்தில் புதிதாக ஒரு வீட்டுக்கு வேலைக்குச் சென்றபோது, அந்த வீட்டுக்காரர் வம்சி என்பவர், பவானியின் ஆவணங்களைக் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண், தான் 15 வருடங்களுக்கு முன்பு தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும் தற்போது ஜெயா என்பவர்தான் தன்னை பார்த்துக்கொள்வதாகவும், அதனால் எந்த ஆவணங்களும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

பணிப்பெண்
பணிப்பெண்
மாதிரி புகைப்படம்

பின்னர் அவர், ‘உன் குடும்பத்தினரை சந்திக்க வேண்டுமா? எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் சம்மதம் தெரிவிக்கவே, அதன்பின் பவானியின் குடும்பத்தினரை ஃபேஸ்புக்கில் தேடத் தொடங்கியுள்ளார், வம்சி. தனக்குத் தெரிந்தவர்களிடமும் பவானி பற்றிய விவரங்களைக் கூறியுள்ளார். வம்சியின் ஃபேஸ்புக் பதிவுக்கு ஒருவர் பதில் அளிக்கவே, அவரைத் தொடர்புகொண்டு பவானியின் குடும்பத்தினரைக் கண்டுபிடித்துள்ளார் வம்சி.

சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக் மற்றும் வம்சியின் உதவியால், தன் குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார் பவானி. இது பற்றி பவானியைப் பெற்ற தாய் வரலட்சுமி கூறுகையில், “ சிறு வயதில் என் மகள் பவானியும் மகன் கோபியும்தான் பள்ளிக்குச் சென்றுவருவார்கள். ஆனால் ஒரு நாள், கோபி மட்டும் வந்தான் பவானி வரும் வழியில் எங்கேயோ தொலைந்துவிட்டதாகக் கூறினான். பின்னர், அவளைத் தேடி பல இடங்களில் அலைந்தோம், காவல் நிலையத்திலும் புகார் அளித்தோம், இருந்தும் எந்தப் பயனும் இல்லை.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

பவானியைக் கண்டுபிடிக்க இதுவரை நிறைய செலவு செய்துள்ளோம்.ஆனாலும் அவள் எங்கு இருக்கிறாள் என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. ஒருமுறை, ஒருவர் எங்களைத் தொடர்புகொண்டார். பவானி, சார்மினார் அருகில் உள்ள ஒரு காப்பகத்தில் இருப்பதாகக் கூறினார். நாங்கள் விரைந்து அங்கு சென்றோம். ஆனால், அவள் அங்கு இல்லை. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, என் மகள் மீண்டும் எனக்கு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தாயைக் கண்டுபிடித்தார் டேவிட் சாந்தகுமார்! - முடிவுக்கு வந்தது 39 வருடப் போராட்டம்

“ஒரு மழை நாளில், எங்கள் வீட்டுக்கு அருகில் பவானி தனியாக நின்றுகொண்டிருந்தாள். அவளை வீட்டுக்கு அழைத்துவந்து விவரங்கள் கேட்டறிந்து, அவளின் பெற்றோரைத் தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர், காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்தோம், எந்தப் பயனும் இல்லை. அதனால், அவளை என் மகளாகவே வளர்க்கத் தொடங்கினேன். இத்தனை வருடங்கள் கழித்து அவளது பெற்றோர் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இருந்தும் அவள் எங்களை விட்டுப் பிரியப் போகிறாள் என நினைக்கும்போது வேதனையாக உள்ளது. நாங்கள் அவளை தடுக்கப்போவதில்லை. அவள் எப்போது வேண்டுமானாலும் பெற்றோரிடம் செல்லலாம். இங்கும் எப்போதும் வரலாம்” எனக் கூறியுள்ளார், பவானியை வளர்த்த ஜெயா.

பெற்றோருடன் இணைந்த பவானி
பெற்றோருடன் இணைந்த பவானி
TV9 Telugu

15 ஆண்டுகளுக்குப் பிறகு, தொலைத்த தன் பெற்றோரை ஃபேஸ்புக் உதவியால் ஒரு பெண் கண்டுபிடித்துள்ள விஷயம், சமூகவலைதளத்தில் வெளியாகி அதிக கவனம் ஈர்த்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு