Published:Updated:

ஆங்கிலம், இந்தி தெரியாததால் இருக்கை மாற்றி அமரவைக்கப்பட்ட பெண்; இண்டிகோவுக்கு கே.டி.ஆர் கண்டனம்!

இண்டிகோ விமானம்

இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு ஆங்கிலம், இந்தி தெரியாததால், இருக்கை மாறி அமரும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆங்கிலம், இந்தி தெரியாததால் இருக்கை மாற்றி அமரவைக்கப்பட்ட பெண்; இண்டிகோவுக்கு கே.டி.ஆர் கண்டனம்!

இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு ஆங்கிலம், இந்தி தெரியாததால், இருக்கை மாறி அமரும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
இண்டிகோ விமானம்

கடந்த வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 17-ம் தேதி ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு இண்டிகோ விமானம் ஒன்று வந்திருக்கிறது. இந்த விமானத்தில் தெலுங்கு மொழி மட்டுமே தெரிந்த பெண் ஒருவர் பயணம் செய்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம், இந்தி தெரியாதெனக் கூறப்படுகிறது. அவருக்குத் தெலுங்கு மட்டுமே தெரியும் என்பதால் விமான ஊழியர்கள் அவரைக் கட்டாயப்படுத்தி அவருடைய இடத்திலிருந்து மாற்றி அமரவைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அகமதாபாத் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் தேவஸ்மிதா சக்கரவர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``இதுவும் ஒரு வகையிலான பாகுபாடுதான். இது தொடர்பாக பணிப்பெண்ணிடம் கேட்டபோது `பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது' என்கிறார்" எனப் பதிவிட்டிருந்தார். தேவஸ்மிதா தனது ட்விட்டர் பதிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை டேக் செய்து, ``பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இவற்றை நீங்கள் சரிசெய்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இண்டிகோ விமானம்
இண்டிகோ விமானம்

இந்த நிலையில், தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இண்டிகோ நிர்வாகமே, உள்ளூர் மொழிகளை மதிக்கத் தொடங்குங்கள். ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாத பயணிகளையும் மதிக்கத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிராந்திய வழித்தடங்களில், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற உள்ளூர் மொழி பேசக்கூடிய பணியாளர்களை அதிகம் நியமிக்கவும். இதுதான் ஒரே தீர்வாக இருக்கும்" எனப் பதிவிட்டிருக்கிறார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கே.டி.ஆரின் கருத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.