Published:Updated:

`30 தற்கொலைப் படையினர்; ராணுவம்மீது தாக்குதல்!'- `ஜெய்ஷ் இ முகமது' அமைப்பின் புதிய பிளான்

ஒருபக்கம் பால்கோட் தாக்குதலிலிருந்து மீள முடியாமல் போனது, மற்றொருபுறம் சர்வதேச நாடுகளின் நெருக்கடி எனக் கடும் சிக்கல்களை ஜெய்ஷ் இ முகமது அமைப்பு சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது.

Masood Azhar
Masood Azhar

பாகிஸ்தானை மையமாகக்கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு, இந்தியாவுக்கு எதிராகப் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக, அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன. நீண்ட தடைக்குப் பிறகு, அவர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். இதனால் அவரது சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டதால், கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார் மசூத் அசார். அதேபோல், ஒருபக்கம் பால்கோட் தாக்குதலிலிருந்து மீள முடியாமல் இருப்பது, மற்றொருபுறம் சர்வதேச நாடுகளின் நெருக்கடி ஆகியவற்றால் கடும் சிக்கல்களைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Mufti Abdul Rauf Asghar
Mufti Abdul Rauf Asghar

இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெயரை `மஜ்லிஸ் வுராசா-இ-சுஹுதா ஜம்மு வா காஷ்மீர்' என்று பெயர் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

``ஜம்மு-காஷ்மீருக்காக உயிர்நீத்த தியாகிகளின் சந்ததிகளின் குழு' என்பதே இந்தப் புதிய பெயரின் அர்த்தம். சர்வதேச நெருக்கடிகளை ஓரளவுக்கு சமாளிக்கும் வகையில், அமைப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ``மசூத் அசார் தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, பவல்பூரில் தங்கியுள்ளார். இதனால் தற்போது பாகிஸ்தானை மையமாகக்கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டைத் தனது கையில் வைத்துள்ளார், மசூத் அசாரின் இளைய சகோதரர் முப்தி அப்துல் ரவூப் அஸ்கர்.

இந்திய இறையாண்மையின் சவால் தாவூத்!

பெயர் மாற்றப்பட்டாலும், ஏற்கெனவே இருந்த தலைமையின் கீழ்தான் தற்போது செயல்பட உள்ளனர். பால்கோட்டில் தாக்குதல்களுக்கு உள்ளான தீவிரவாத குழுக்கள், அஸ்கர் தலைமையில் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன. இந்த மையத்திலிருந்து இந்தியாவை மீண்டும் தாக்கும் வகையில் தற்போது 30 தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் காஷ்மீர் எல்லையில் உள்ள ராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்தும் வகையில் இவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டுவருவதாகவும் சொல்கின்றனர். அஸ்கர் பால்கோட்டில் தங்கவில்லை என்றாலும், சயல்கோட் மற்றும் பவல்பூரிலிருந்து தீவிரவாதிகளுக்கு அவர் பயிற்சி கொடுத்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

indian army
indian army

காஷ்மீரில் ரத்துசெய்யப்பட்டுள்ள 370 சட்டப் பிரிவுக்கு எதிராக சில அமைப்புகள், தற்போது ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் கைகோத்துள்ள நிலையில், பவல்பூரில் உள்ள இரண்டு முக்கிய பயிற்சி மையங்களும் ஜம்ருத்தில் ஒரு மையமும் காஷ்மீரில் ஜிகாத்துக்கு (தீவிரவாத நடவடிக்கைக்கு) தயாராகும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முழுமையான மோதலுக்கு வித்திடும் வகையில் தீவிரவாதிகளைத் தயார்படுத்திவருகின்றனர். 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகே இந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன" எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

credit - hindustantimes

Vikatan