Published:Updated:

காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!- உஷார் நிலையில் ராணுவம்

கலிலுல்லா.ச

ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் குழப்பத்தின் உச்சியில் உள்ளனர்.

பாதுகாப்புப் படை
பாதுகாப்புப் படை

காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு புறம் காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றுள்ள பயணிகள், அமர்நாத்துக்குச் சென்றுள்ள பக்தர்கள் விரைவாக மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் குழப்பத்தின் உச்சியில் உள்ளனர். தங்கள் மாநிலத்தில் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்த காஷ்மீர் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புதல், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்களை வாங்குதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படை
பாதுகாப்புப் படை

மேலும், காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் திரும்பி வர டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மற்றும் சோபியன் மாவட்டத்தில் தனித்தனியாக இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்படுள்ளனர். பாரமுல்லா மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர். அப்போது, தீவிராதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதாகவும், பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் தாக்க பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகள்
தீவிரவாதிகள்
ANI

அதேபோல நேற்றிரவு சோபியன் மாவட்டத்தில் உள்ள பந்துஸ்தான் பகுதியில் ஜெய் ஷ் இ முகமது அமைப்பைச்சேர்ந்த மன்சூர் பாட் மற்றும் ஜீனதுல் இஸ்லாம் நைகோ ஆகிய பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இவர்கள் இருவரும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ``நைகோவுக்கு எதிரான பல்வேறு தீவிரவாத வழக்குகள் மற்றும் சோபியன் காவல்நிலையத்தை தாக்கியுள்ள வழக்கும் இருக்கிறது” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.