Published:Updated:

சர்வதேச மனித உரிமைகள் தினம்: சமூக செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் கைது உணர்த்தும் செய்தி என்ன?

குர்ரம் பர்வேஸ்
News
குர்ரம் பர்வேஸ்

2019 ஆகஸ்ட்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு மனித உரிமை அமைப்புகளுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

Published:Updated:

சர்வதேச மனித உரிமைகள் தினம்: சமூக செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் கைது உணர்த்தும் செய்தி என்ன?

2019 ஆகஸ்ட்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு மனித உரிமை அமைப்புகளுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

குர்ரம் பர்வேஸ்
News
குர்ரம் பர்வேஸ்
இந்தியாவின் ஜேம்ஸ்பாண்டாக சோஷியல் மீடியாவில் உயர்த்திப் பிடிக்கப்படும் அதிகாரி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் இப்படிப் பேசினார். "மனித உரிமை பற்றிப் பேசும் சிவில் சமூகம்தான் இனி புதிய போர்முனையாக இருக்கப் போகிறது. அவர்கள் தேசநலனுக்கு எதிராக செயல்படுகிறார்கள்."

தேசிய மனித உரிமைகள் ஆணையமோ இன்னும் ஒருபடி மேலே போய், 'தீவிரவாதம், நக்சலைட் பயங்கரவாதம் போன்ற தீமைகளை ஒழிப்பதற்குத் தடையாக மனித உரிமை அமைப்புகள் இருக்கின்றனவா?' என விவாதமே நடத்தியது.

'மனித உரிமை' என்பதை மிக மோசமான கெட்ட வார்த்தைகளாக ராணுவமும், போலீஸும் நினைக்கிறது. மனித உரிமை குறித்துப் பேசுகிறவர்களை தேசவிரோதிகளாக ஆளுங்கட்சி சித்திரிக்கிறது. அரசின் மனோபாவமும் இப்படித்தான் இருக்கிறது.

காஷ்மீரில் குர்ரம் பர்வேஸ் கைது செய்யப்பட்டிருப்பது இதையே உணர்த்துகிறது. குர்ரம் பர்வேஸ் எந்தத் தீவிரவாத அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை. ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர். காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தை ஒருங்கிணைத்து நடத்தி வருபவர். சர்வதேச அளவில் மதிக்கப்படும் ஒரு மனித உரிமை செயல்பாட்டாளர். வழக்கறிஞர்.

குர்ரம் பர்வேஸ்
குர்ரம் பர்வேஸ்
"சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளின்படி ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரின் உயிரும் உயிர்வாழும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும். அடக்குமுறையைக் கையாளும் அரசுகள், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி மக்களை ஒன்றிணைய விடாமல் பார்த்துக்கொள்கின்றன."
என்று ஐ.நா சபையில் பேசியவர் குர்ரம் பர்வேஸ்.

தேசியப் புலனாய்வு அமைப்பு அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தல் நவம்பர் 22-ம் தேதி கைது செய்துள்ளது. எல்லை தாண்டி பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துதரும் மனிதர்களுக்கு அவர் ஆறு ஆண்டுகளாக உதவி வந்தார் என்பது குற்றச்சாட்டு. டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கண்டித்துள்ளன.

அரசியல் சட்டம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை சட்டப்படியான வழிகளில் உறுதி செய்வதுதான் மனித உரிமை செயல்பாட்டாளரின் வேலை. அதைத்தான் பர்வேஸ் செய்தார்.

பர்வேஸின் பணிகள் எவரையும் நெகிழ வைத்துவிடும். 2004-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அவர் ஒரு காரில் பயணம் செய்தார். கண்ணிவெடியில் கார் சிக்கி வெடித்துச் சிதறியது. அந்த விபத்தில் அவருடன் சென்ற இருவர் பலியாகிவிட்டனர். காலில் படுகாயத்துடன் பர்வேஸ் பிழைத்தார்.

காஷ்மீரில் தீவிரவாதம் வளரத் தொடங்கிய 90களில் ஆரம்பித்து பல இடங்களில் தீவிரவாதக் குழுக்கள் கண்ணிவெடி புதைத்து வைப்பது வழக்கமாக இருந்தது. பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்க ராணுவமும் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தியது. இந்தக் கண்ணிவெடிகளில் அப்பாவிகளே பலியாவது வழக்கமாக இருந்தது.

அதன்பின் காஷ்மீர் மக்களைத் திரட்டி, கண்ணிவெடிகளுக்கு எதிராக பிரசார இயக்கம் ஆரம்பித்தார் பர்வேஸ். மூன்று ஆண்டுகள் இடைவிடாத போராட்டத்துக்குப் பலன் கிடைத்தது. 2007-ம் ஆண்டு காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஜிகாத் கவுன்சில், 'இனி கண்ணிவெடிகளைப் பயன்படுத்த மாட்டோம்' என்று எழுத்துபூர்வமாக அறிவித்தது. அதன்பிறகே அங்கே கண்ணிவெடி விபத்துகள் குறைந்தன.

 காஷ்மீர்
காஷ்மீர்

20 ஆண்டுகளாக மனித உரிமைக் களத்தில் இருக்கும் பர்வேஸ் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல; எந்தத் தீவிரவாத அமைப்புடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் இல்லை. அரசுடனும் நெருக்கமாக இருக்கவில்லை. பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும், வன்முறையற்ற சட்டபூர்வ வழியில் அவருக்கு நியாயம் கிடைக்க உதவினார். காஷ்மீரில் அமைதிக்கான தீர்வு ஆயுதங்களற்ற வழியில் மட்டுமே கிடைக்கும் என நம்பினார்.

காணாமல் அடிக்கப்பட்டவர்களைத் தேடும் குடும்பங்களுக்கு உதவுவது ஒரு வழக்கறிஞராகவும், மனித உரிமை செயல்பாட்டாளராகவும் பர்வேஸின் முக்கியமான சேவையாக இருந்தது. தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரிலோ, தீவிரவாதிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தாலோ பலரை ராணுவம் வீடுபுகுந்து திடீரென அழைத்துச் செல்லும். அவர்களில் பலர் வீடு திரும்பியதே இல்லை. இப்படி சுமார் 8 ஆயிரம் பேரைப் பற்றிக் கணக்கெடுத்திருக்கிறார் பர்வேஸ்.

குடும்பத்தினர் போய் ராணுவ முகாமிலோ போலீஸிலோ கேட்டால், "அவர் எங்காவது பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெறுவதற்குப் போயிருப்பார். காணவில்லை என்று பொய் சொல்லாதீர்கள்" என்று பதில் கிடைக்கும். காஷ்மீரில் 'அரை விதவைகள்' என்ற அடையாளத்துடன் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். ராணுவத்தால் சந்தேகத்தின் பேரில் கூட்டிச் செல்லப்பட்ட தங்கள் கணவர் உயிருடன் இருக்கிறாரா, அல்லது இறந்துவிட்டாரா என்பது புரியாத குழப்பத்துடன் வாழும் பெண்கள் இவர்கள். கணவர் இல்லாத சூழலில் புகுந்த வீட்டில் வசிப்பதா, அல்லது குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு தனது பிறந்த வீட்டுக்குப் போவதா என்று புரியாத சமூக அவலத்தில் வாழ்கிறார்கள் இவர்கள்.

இவர்களின் துயர் தீர்க்கும் முயற்சியில் இறங்கினார் பர்வேஸ். அப்போது ஒரு திடுக்கிடும் உண்மையை இவர் அம்பலப்படுத்தினார். வடக்கு காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில், அடையாளம் தெரியாத சடலங்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளை இவர் கண்டுபிடித்தார். 1989 முதல் இப்படி சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பலரை இப்படித்தான் எங்கோ தொலைதூர கிராமங்களில் புதைத்திருக்கிறது ராணுவம். இப்படி நூற்றுக்கணக்கான சடலங்கள் இருப்பதை உறுதி செய்தார் பர்வேஸ்.

அது காஷ்மீரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காஷ்மீர் மாநில மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. 2011ம் ஆண்டு நடைபெற்ற அதிகாரபூர்வ விசாரணையில், 38 இடங்களில் 2,156 பேர் இப்படி புதைக்கப்பட்டது உறுதியானது. மாநில சட்டமன்றம் வரை இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டது.
தேசிய மனித உரிமை ஆணையம்
தேசிய மனித உரிமை ஆணையம்

வன்முறையால் பாதிக்கப்படும் எவருக்காகவும் களத்தில் நின்றார் பர்வேஸ். ஆயுதத்தை யார் தூக்கினாலும் தவறு என்பது அவர் கருத்து. காஷ்மீர் தீவிரவாதிகளால் காஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் அவர் குரல் எழுப்பினார். 2003-ம் ஆண்டு காஷ்மீரின் நாடிமார்க் பகுதியில் 24 காஷ்மீர் பண்டிட்டுகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். உடனடியாக உண்மை அறியும் குழுவுடன் பயணம் செய்து, அந்த சம்பவத்துக்கான நீதிப் போராட்டத்தை நடத்தினார் பர்வேஸ்.

காஷ்மீரில் அமைதியை திரும்பச் செய்வதற்காகவும், காஷ்மீரி பண்டிட்டுகள் இயல்பாக வாழ்வதற்காகவும் தன்னால் இயன்ற முயற்சிகளை அவர் எடுத்தார். காஷ்மீரி முஸ்லிம் தலைவர்களையும் காஷ்மீரி பண்டிட் சமூகத் தலைவர்களையும் ஒரே மேடையில் இணைத்துப் பேச வைத்தார். இப்படி ஆறுமுறை பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான கசப்பை அகற்றுவதற்கு முயற்சி எடுத்தார்.

காஷ்மீர் முஸ்லிம் அமைப்புகளில் இந்தியாவுக்கு இணக்கமானவை, இந்தியாவுக்கு எதிரானவை என இரண்டு ரகங்கள் உண்டு. ஜம்மு காஷ்மீரின் அமைதியான எதிர்காலத்துக்காக இந்த இரண்டு தரப்பினரையும் ஒரே மேடையில் இணைத்துப் பேச வைத்தவர் பர்வேஸ்.

2019 ஆகஸ்ட்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு மனித உரிமை அமைப்புகளுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

"குறிப்பாக பர்வேஸ் மீது அரசுக்குக் கோபம் ஏற்படக் காரணங்கள் இருக்கின்றன. காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை கவுன்சில் சமீப ஆண்டுகளில் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள், பர்வேஸ் வெளியிட்ட ஆதாரங்களை வைத்தே மத்திய அரசைக் குற்றம் சாட்டின. இது சர்வதேச அளவில் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. இதனால் அரசுக்கு எழுந்த கோபத்தின் வெளிப்பாடே இந்தக் கைது!"
என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.

கடந்த ஆண்டு அக்டோபரிலும் பர்வேஸின் அலுவலகத்தை தேசியப் புலனாய்வு அமைப்பு சோதனை செய்தது. அப்போது அவரைக் கைது செய்யவில்லை. அதன்பிறகே கிட்டத்தட்ட செயல்பட முடியாத அளவு அவரை முடக்கி வைத்திருந்தார்கள். இப்போது கைது செய்துவிட்டனர்.

குர்ரம் பர்வேஸ்
குர்ரம் பர்வேஸ்
AP

பர்வேஸ் சிறைக்குப் போவது இது முதல் முறை அல்ல. 2016-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கருத்தரங்கில் அவர் பங்கேற்பதாக இருந்தது. அவரை வெளிநாடு செல்லவிடாமல் தடுத்து, ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தார்கள். 76 நாள்கள் சட்டப்போராட்டம் நடத்தி வெளியில் வந்தார் அவர். இப்போது மீண்டும் சட்டப் போராட்டத்தை திகார் சிறையிலிருந்து ஆரம்பித்திருக்கிறார். கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டிருப்பதால், இம்முறை அது அவ்வளவு சுலபமாக இருக்காது என்பது நிச்சயம்.

"அமைதிவழியில் மனித உரிமைக் களத்தில் செயல்படுவோரை இப்படிக் கைது செய்வது, காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஆகிவிடும்" என்று காஷ்மீர் மக்கள் நலனில் அக்கறை உள்ள பலரும் வருந்துகிறார்கள்.

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்.