Published:Updated:

முடிவுக்கு வருகிறது தேடுதல் பணி -நேத்ராவதி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது சித்தார்த்தாவின் உடல்!

பிரேம் குமார் எஸ்.கே.

கடந்த 24 மணிநேரத்துக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது!

சித்தார்த்தா
சித்தார்த்தா

காஃபி டே நிறுவனம்தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய தனி நபர் காஃபி தோட்டத்தையும் கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான 58 வயதுடைய வி.ஜி.சித்தார்த்தா, நேற்றைய முன்தினம் மாலை காணாமல் போயுள்ளார்.

காஃபி டே
காஃபி டே

கர்நாடகாவின் சிக்மங்களூருவில் உள்ள தன் காஃபி தோட்டத்துக்கு வேலை விஷயமாக நேற்றைய முன்தினம் சென்றுள்ளார் சித்தார்த்தா. அங்கு வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டுத் திரும்பும்போது, தன் கார் டிரைவரிடம் கேரளா செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். டிரைவரும் சிக்மங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலை வழியாகக் கேரளாவுக்குச் சென்றுள்ளனர்.

கார், மங்களூரு நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென காரை நிறுத்தும்படி தன் டிரைவரிடம் கூறியுள்ளார் சித்தார்த்தா. அவரின் சொல்படி டிரைவரும் காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்து இறங்கிய சித்தார்த்தா டிரைவரிடம், ``உள்ளேயே இரு. சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். அரை மணி நேரம் ஆகியும் சித்தார்த்தா வராததால் குழப்பமடைந்த கார் டிரைவர், சித்தார்த்தாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது, அவரின் போன் ஸ்விட்ச் ஆஃபில் இருந்துள்ளது. பதறிப்போன டிரைவர், உடனடியாக சித்தார்த்தாவின் வீட்டுக்குப் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

சித்தாத்தாவை தேடும் பணிகள்
சித்தாத்தாவை தேடும் பணிகள்
ANI

ஜெப்பினா மோஹரு (Jeppina Mogaru) என்ற இடத்தில்தான் சித்தார்த்தா காணாமல் போயுள்ளார். அந்தப் பகுதிக்கு அருகில்தான் நேத்ராவதி ஆறு ஓடுகிறது. இதனால் அவர் ஆற்றில் குதித்திருக்கலாம் என்ற அடிப்படையில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்றன. ஹெலிகாப்டர், படகுகள் மூலம் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

ஆற்றில் தண்ணீர் நிரம்ப ஓடியதால், மீட்புப் பணியில் கடும் சவால்கள் நிறைந்திருந்தன. இந்நிலையில் நேற்று மாலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், தான் மீன் பிடித்துக் கொண்டு இருக்கும்போது சுமார் 60 வயது மதிக்கத் தக்க நபர் ஆற்றில் குதித்ததைப் பார்த்ததாகவும் உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்றதாகவும் போலீஸாரிடம் கூறியுள்ளார். ஆனால், தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சித்தார்த்தா
சித்தார்த்தா

இந்நிலையில் இன்று காலை சித்தார்த்தாவின் உடல் நேத்ராவதி ஆற்றின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. மங்களூரின் ஹோஜே பஜார் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர் மீனவர் ஒருவர் கரை ஒதுங்கிய அவரது உடலை பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கம்யூனிச தலைவராக நினைத்தவர் கஃபே காபி டே ஓனர்... சித்தார்த்தா பயோ! #VGSiddhartha #CafeCoffeeDay

சித்தார்த்தா உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வுக்குப் பின்னர் அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையும் வேகம் பெற்றுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.