Published:Updated:

புதுச்சேரி: `149 பக்க பட்ஜெட்; 3 மணிநேர உரை' - கிரண் பேடிக்கு அதிர்ச்சி கொடுத்த நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிகார மோதல் எதிரொலியாக ஆளுநர் கிரண் பேடி உரை இல்லாமல் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

அதிகார மோதல்..

புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, நாராயணசாமியை முதல்வராக அறிவித்தது. அதே சூட்டில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடியை நியமித்தது மத்திய பி.ஜே.பி அரசு. அன்றிலிருந்து ஆளுநர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும் எலியும் பூனையுமாக அதிகார மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பல்வேறு இக்கட்டானச் சூழல்களைக் கடந்து இன்று தனது ஆட்சியின் இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

முதல்வர் நாராயணசாமி - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
முதல்வர் நாராயணசாமி - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி

புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு நிதியாண்டிற்கான ரூ.9,000 கோடிக்கு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய பட்ஜெட் அறிக்கையை மதிப்பீடு செய்து, மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதல் வழங்கியது. அதையடுத்து இன்று புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மானிய கோரிக்கைகளின் விவரங்கள் எதுவும் துறை ரீதியாக முழுமையாகச் சமர்ப்பிக்கவில்லை என்றும், ஆளுநர் உரையைக் கால தாமதமாக அனுப்பியதாகவும் கூறி பட்ஜெட் உரைக்கு வர முடியாது என்று கடிதம் மூலம் மறுப்பு தெரிவித்தார் கிரண் பேடி. உடனே, `மத்திய அரசின் அனுமதி பெற்ற பிறகே கூட்டத்தொடர் தொடங்குவதால், ஜனநாயக முறைப்படி ஆளுநர் இதில் பங்கேற்கலாம்’ என்று கிரண் பேடிக்கு பதில் கடிதம் எழுதினார் முதல்வர் நாராயணசாமி.

தெரியாத அறிக்கைக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்க முடியும்?

அதற்கு, "பட்ஜெட்டிற்கு முழு வடிவம் பெறாமல் சட்டப்பேரவை ஏன் கூட்ட வேண்டும் ? யூனியன் பிரதேச சட்டப்படி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அதனால் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சரியான கோப்புகளை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பு வேறு ஒரு தேதியில் சட்டப்பேரவையைக் கூட்டினால் ஆளுநர் உரை அளிக்கிறேன். நிதிநிலை அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்காதபோது, தெரியாத அறிக்கைக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்க முடியும்" என்று கேள்வி எழுப்பியிருந்தார் கிரண் பேடி.

பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் முதல்வர் நாராயணசாமி
பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் முதல்வர் நாராயணசாமி

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் 2020-21-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குக் கூடியது. ஆளுநர் கிரண் பேடிக்காக 10 நிமிடங்கள் காத்திருந்தது பேரவை. ஆனால், அவர் வராததால் பேரவை நிகழ்வைத் தொடங்கிய சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை ஆளுநர் உரையாற்ற வரவில்லை என்பதை காரணம் காட்டி பேரவை நிகழ்ச்சிகளை ரத்து செய்ததுடன், மதியம் 12 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி சரியாக 12 மணியளவில் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி ரூ.9,000 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 149 பக்கங்களைக் கொண்ட அந்த பட்ஜெட் அறிக்கையை 3 மணி நேரம் தொடர்ச்சியாக வாசித்தார். அதில், "வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்குக் குடிநீர் வரி ரத்து செய்யப்படும். 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். நம்மாழ்வார் வேளாண் புத்தாக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தி நெல் உள்ளிட்ட சிறுதானியம் மற்றும் இதர பயிர் வகைகளுக்கு அரசு மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டையில் வழங்கும் திட்டத்துக்காக ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்படும்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியுடன் அமைச்சகள், எம்.எல்.ஏ-க்கள்
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியுடன் அமைச்சகள், எம்.எல்.ஏ-க்கள்

புதுச்சேரியில் பால் உற்பத்தியைப் பெருக்கி மகாத்மா காந்தி பெயரில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது காலையில் பால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கலைஞர் கருணாநிதி சிற்றுண்டி திட்டம் என்ற பெயரில் காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி எனச் சிற்றுண்டி வழங்கப்படும். ரூ.4 கோடி செலவில் புதிய கல்வி தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடங்கப்படும். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரில் 10, 12-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கைக்கணினி (டேப்லெட்) வழங்கப்படும். ஏனாம் பிராந்தியத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி இந்தக் கல்வி ஆண்டிலேயே தொடங்கப்படும்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு இலவசக் கல்வி வழங்கப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகளில், புதிதாகத் தகவல் தொழில்நுட்பப் பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்திராகாந்தி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு, முழு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விலையில்லா கைக்கணினி பள்ளிக் கல்வித் துறையின்‌ புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும். ஆதிதிராவிடர்களுக்குத் திருமண நிதி உதவியாக ரூபாய் 75,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை உயர்த்தி ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

`இனியும் நான் பேசாமல் இருந்தால் சரிவராது!’ - கிரண் பேடிக்கு எதிராகக் கொந்தளித்த நாராயணசாமி

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது இதுவே முதல் முறை என்பதுதான் இதில் ஹைலைட்.

அடுத்த கட்டுரைக்கு