Published:Updated:

`தெலங்கானா டு ஜார்க்கண்ட்; முறையான சமூக விலகல்’ - தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட முதல் சிறப்பு ரயில்

ரயில்
News
ரயில்

தெலங்கானாவிலிருந்து 1,200 தொழிலாளர்களுடன் சிறப்பு ரயில் இன்று அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இயக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் மொத்த உலகமும் நடுங்கிக்கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில் இதே வைரஸை முன்வைத்து இந்தியாவில் பல பிரச்னைகள், சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இங்கு முதல்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 2 வாரத்தில் தொழிலாளர்களின் இடப்பெயர்வு பிரச்னை மிகவும் பெரிய சர்ச்சையாக இருந்தது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

நாட்டின் பெரிய நகரங்களில் தங்கி வேலை செய்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கி.மீ நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணித்தனர். இதனால் சில உயிரிழப்புகளும் நேர்ந்தன. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும்விதமாக தொழிலாளர்கள் தற்போது எந்த இடத்தில் உள்ளார்களோ அங்கேயே அவர்களை முகாம்களில் தங்கவைத்து தொழிலாளர்களுக்குத் தேவையான உணவை வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால் பள்ளிகள், திருமண மண்டபங்கள், பெரிய கூடங்கள் ஆகியவை தற்காலிக முகாமாக மாற்றப்பட்டு அங்கு தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டனர். முதல்கட்ட ஊரடங்கு முடிந்து இன்னும் இரண்டு நாள்களில் இரண்டாம் கட்ட ஊரடங்கும் முடியவுள்ள நிலையில் தொழிலாளர்கள் தங்களின் ஊருக்குச் செல்ல வேண்டும் எனத் தொடர் கோரிக்கை விடுத்துவந்தனர். இதை ஏற்ற மத்திய அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குத் திரும்ப பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு மாநில அரசுகளிடம் கூறியுள்ளது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

அதன்படி தெலங்கானாவின் லிங்கம்பள்ளியிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹாட்டியாவுக்கு 24 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று காலை 4:30 மணிக்கு தெலங்கானாவிலிருந்து 1,200 தொழிலாளர்களுடன் புறப்பட்டது. பொதுவாக ஒரு ரயில் பெட்டியில் 72 பேர் அமர இடம் இருக்கும். ஆனால், கொரோனா காலத்தில் சமூகவிலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகச் சிறப்பு ரயிலில் 54 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் நிலையத்திலும் முறையான சமூகவிலகல் கடைப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்பு ரயில் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தெலங்கானா மற்றும் ஜார்க்கண்ட் அரசுகள் விடுத்த வேண்டுகோளின்படி இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. தற்போதைக்கு இந்த ரயில் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் இதேபோன்று சிறப்பு ரயில் இயக்குவது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து முடிவெடுக்கும். அதுவும் இரண்டு மாநில அரசுகளும் கேட்டுக்கொண்டால் ஆலோசிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.