Published:Updated:

`1891-க்குப் பிறகு இதுவே முதல் முறை; உருவானது நிசார்கா புயல்!’ - இந்திய வானிலை மையம் அறிவிப்பு

புயல்
புயல் ( Representational image )

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள 'நிசார்கா' புயல், வரும் 3-ம் தேதி மகாராஷ்டிரா - குஜராத் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் இந்தியா உட்பட மொத்த உலகத்தையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில், இந்த பாதிப்பே இன்னும் முழுமையாக முடியாத நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை 'ஆம்பன்' புயல் தாக்கியது. அந்த பாதிப்பு ஓய்வதற்கு முன்னரே ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேச மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அதிகரித்தது. தொடர்ச்சியான இயற்கை பாதிப்புகளால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சோகத்தில் உள்ளனர்.

புயல்
புயல்
மாதிரி புகைப்படம் \ AP

இவை அனைத்துக்கும் மத்தியில், இந்தியாவில் கொரோனாவுக்காகப் பிறப்பிக்கப்பட்டிருந்த 4 கட்ட ஊரடங்கு முடிவடைந்து, முதல்முறையாக Unlock 1 இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இனிமேல் வேலைக்குச் செல்லலாம், ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தைச் சரிசெய்யலாம் என சற்றே உற்சாகத்தில் இன்றைய நாளைத் தொடங்கிய மக்களுக்கு, வானிலை ஆய்வு மையம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மக்களுக்குத்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து சூறாவளியாகத் தீவிரமடையவுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, வரும் ஜூன் 3-ம் தேதி பிற்பகல், மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு, நிசார்கா (Nisarga) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சூறாவளி மகாராஷ்டிராவைக் கடக்கும்போது, அம்மாநில தலைநகர் மும்பையில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையைத் தவிர தானே, நவி மும்பை, பன்வெல், கல்யாண் டோம்பிவ்லி, மீரா பயந்தர், வசாய் விரார், பத்லாப்பூர், அம்பர்நாத் ஆகிய நகரங்களிலும் பாதிப்பு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

நிசார்கா புயல்
நிசார்கா புயல்

தற்போது, மும்பையிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் இருக்கும் நிசார்கா புயல், ஜூன் 3 -ம் தேதி கரையைக் கடக்கும்போது, மகாராஷ்டிராவில் 105 - 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், நாளை முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் கன மழை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மீனவர்கள், அடுத்த சில நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். அதேபோல், அடுத்த 48 மணி நேரத்துக்கு தென் கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரள கடற்கரைப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

`புயல், கடல் கொந்தளிப்பு வந்தாலும் அவை காக்கும்!' -சட்டவிரோத வலைகளால் அழியும் பவளப் பாறைகள்

‘1891-ம் ஆண்டுக்குப் பிறகு, மகாராஷ்டிரா மற்றும் மும்பையை எந்த ஜூன் மாத வெப்பமண்டலப் புயலும் தாக்கவில்லை. 1948 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் இரண்டு வெப்பமண்டல புயல்கள் மும்பையை நெருங்கி வந்தன. ஆனால், அவை சூறாவளியாக மாறவில்லை’ என இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளர் அக்‌ஷய் தியோரஸ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். நிசார்கா புயலின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு