Published:Updated:

நீர்ப்பாசனத் திட்டம்; ரூ.70,000 கோடி ஊழல்! - அஜித் பவாருக்கு எதிராகத் திரட்டப்பட்ட ஆதாரம்

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் சிக்கிய ஊழல் வழக்கில் அவருக்கு எதிராகப் பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அஜித் பவார்
அஜித் பவார்

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பதவி மோதல், சர்ச்சை பிரச்னை போன்ற அனைத்தும் அனைவரும் அறிந்ததே. தேர்தல் முடிந்து சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி வைக்கும் நேரத்தில் என்.சி.பியின் அஜித் பவார், பா.ஜ.க-வுடன் இணைந்துகொண்டார்.

அஜித் பவார்
அஜித் பவார்
ANI

இதனால் பா.ஜ.க-வின் பட்னாவிஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து ஒரு வழியாக நீண்ட இழுபறிக்குப் பிறகு சிவசேனா- என்.சி.பி- காங்கிரஸ் கூட்டணி இணைந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் மீதுள்ள ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் துணை முதல்வராகும் அஜித் பவார்? - நிர்வாகிகளிடம் முணுமுணுத்த சரத்பவார்

இந்த வழக்குகளை வைத்துத்தான் அஜித் பவாரை, மத்திய பா.ஜ.க அரசு மிரட்டியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது மூன்று கட்சி கூட்டணியில் உள்ள அஜித் பவார், மீண்டும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய இலாகா ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் பவார் மீது, சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் திரட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் பவார்
அஜித் பவார்

நீர்ப் பாசன ஊழல்!

1999-2014 ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது 2009-ம் ஆண்டு வரை அஜித் பவார் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சராகவும் அதன் பிறகு துணை முதல்வராகவும் பதவி வகித்துவந்தார். அப்போது விதர்பா நீர்ப் பாசன மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் அஜித் பவார் நியமிக்கப்பட்டிருந்தார். விதர்பா நீர்ப் பாசன மேம்பாட்டுக் கழகம், நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில் சுமார் 70,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து அஜித் பவார் மற்றும் விதர்பா மேம்பாட்டுக் கழகத்திலிருந்த அதிகாரிகள் மீது மாநில ஊழல் தடுப்பு போலீஸார் பல வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் கடந்த சில காலங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில்தான் மீண்டும் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அப்போது ஊழல் வழக்கு தொடர்பான பிரமாண பத்திரத்தை, மாநில ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ‘நீர்ப் பாசன முறைகேடு தொடர்பான விசாரணையின் போது, குற்றச்சாட்டுக்கும் அஜித் பவாருக்கும் தொடர்பு உள்ளதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஊழல் தொடர்பான வழக்குகளிலிருந்து அஜித் பவார் விடுவிக்கப்பட்டார்.

அஜித் பவார்
அஜித் பவார்

ஆனால் நீர்ப் பாசன ஊழலில் அஜித் பவாருக்குத் தொடர்பு உள்ளதாகவும் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ரத்து செய்துவிட்டு, இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அஞ்சலி தமானியா, விஜய் பந்த்ரே மற்றும் நீர்ப் பாசனத் திட்ட முன்னாள் பொறியாளர் ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

அவர்கள் சேகரித்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் நேரடியாக அஜித் பவாரை குற்றச்சாட்டும் வகையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. பவார், விதர்பா கழகத்தின் செயலாளரை மீறி தன் சொந்த அதிகாரத்தில் நீர்ப் பாசனத் திட்டத்தின் செலவு அதிகரிப்பை அனுமதித்துள்ளார். மேலும் செலவு அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு அஜித் பவாரின் உதவியாளர், நீர்ப் பாசன அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தையும் சேகரித்துள்ளனர்.

அஜித் பவார்
அஜித் பவார்

இதே போன்று நீர்ப்பாசனத் திட்டம் டெண்டர் விடப்படும்போது மூலப் பொருள்களின் விலை ஏறிவிட்டதாகக் கூறி அரசு நிர்ணயித்த டெண்டர் தொகையைவிட அதிக தொகைக்கு விடப்பட்டுள்ளது என்றும் இன்னும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆதாரங்களும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அஜித் பவார் சிக்கிய நீர்ப் பாசன ஊழல் வழக்கில் அவருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதால் முடித்து வைக்கப்பட்ட வழக்கு எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.