Published:Updated:

"தொடர் தோல்வி, நம்பிக்கையைக் கைவிட மாட்டேன்!" - குழந்தையுடன் டாக்ஸி ஓட்டும் பெண் டிரைவரின் கதை

நந்தினி

"கொஞ்சமாகச் சேர்த்து வைத்து மீண்டும் தனக்குப் பிடித்த ஹோட்டல் தொழிலைத் தொடங்குவதுதான் அவரது கனவு. எனவே அதற்காக ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணிநேரம் வேலை பார்க்கிறார்."

"தொடர் தோல்வி, நம்பிக்கையைக் கைவிட மாட்டேன்!" - குழந்தையுடன் டாக்ஸி ஓட்டும் பெண் டிரைவரின் கதை

"கொஞ்சமாகச் சேர்த்து வைத்து மீண்டும் தனக்குப் பிடித்த ஹோட்டல் தொழிலைத் தொடங்குவதுதான் அவரது கனவு. எனவே அதற்காக ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணிநேரம் வேலை பார்க்கிறார்."

Published:Updated:
நந்தினி
பெண்கள் எல்லா துறைகளிலும் கோலோச்சி வருகின்றனர். குறிப்பாக, ஆண்கள் மட்டுமே சில துறைகளில் வேலை செய்ய முடியும் என்றிருந்த கற்பிதங்களை உடைத்தெறிந்து பெண்கள் அனைத்திலும் கோலோச்சி வருகின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கதையும் தன்னம்பிக்கை அளிக்கும் ஊக்கம் நிறைந்த கதைகள்தான். அப்படி ஓர் நெகிழ்ச்சிக் கதைதான் டாக்ஸி ஓட்டுநர் நந்தினியின் கதை. இந்த நெகிழ்ச்சியான நம்பிக்கையூட்டும் வாழ்க்கைக் கதையை ராகுல் சசி என்பவர் தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "எனது நண்பர் 'ஊபர் (Uber)' செயலி மூலம் எனக்காக டாக்ஸி ஒன்றை புக் செய்திருந்தார். என்னை அழைத்துச் செல்ல வந்த காரில் பெண் ஓட்டுநர் இருந்தார். பிறகு அவருடன் பயணம் செய்து கொண்டிருந்தபோதுதான் அந்தப் பெண்ணின் குழந்தை காரில் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். இது பற்றி அப்பெண்ணிடம் கேட்ட போது தனது குழந்தை விடுமுறையில் இருப்பதாகவும் அதனால் குழந்தையுடன் டாக்ஸி ஓட்டி வருவதாகவும் சொன்னார். அப்பெண்ணைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. அவரது பெயர் நந்தினி. பெங்களூரில் டாக்ஸி ஓட்டும் பணியைச் செய்து வருகிறார். சொந்தமாகத் தொழில் செய்யவேண்டும் என்று ஆசைகொண்டவர்.

அப்படி அவர் தொடங்கிய உணவு கடை ஒன்று கொரோனா காலத்தில் நஷ்டத்தை அடைந்ததால் இப்போது இந்தப் பணியைச் செய்து வருகிறார். இதன் மூலம் பணம் சம்பாதித்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்து மீண்டும் தனக்குப் பிடித்த ஹோட்டல் தொழிலைத் தொடங்குவதுதான் அவரது கனவு. எனவே அதற்காக ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணிநேரம் வேலை பார்க்கிறார். ஆனாலும் அவரிடம் எந்தச் சலிப்பும் தெரியவில்லை. பணம் சேகரித்து மீண்டும் தனது லட்சியத்தை அடைய வேண்டும் என்பதே அவரின் கனவாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மேலும், "நான் அவரிடம், 'உங்களின் வாழ்க்கை எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கிறது. உங்களுடன் ஒரு செல்ஃபீ எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன்'. அவரும் சிரித்த முகத்துடன் சரி என்று ஒப்புக்கொண்டார்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இது போன்ற எளிய மனிதர்களின் நம்பிக்கைக் கதைகள் நிச்சயம் ஏதோவொரு ஒளிக்கீற்றை நமக்குமே கொடுத்துச் செல்கின்றன.