Published:Updated:

`நட்சத்திர விடுதி ஃபீல்; அமைச்சரின் பர்சனல் கால்!’- கொரோனா தனிமை பற்றிப் பகிரும் டெல்லி தொழிலதிபர்

கொரோனா
கொரோனா

கொரோனா தொற்றால் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய டெல்லி தொழிலதிபர் தான் தனிமைப்படுத்தப்பட்ட நாள்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கொரோனா வைரஸால் இந்தியாவில் 100-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அப்படி கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ள டெல்லியைச் சேர்ந்த சஞ்சய் மேத்தா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தான் தங்கியிருந்த அரசு மருத்துவமனை பற்றியும் தான் தனிமைப்படுத்தப்பட்ட அனுபவம் பற்றியும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு
vikatan

சஞ்சய் மேத்தா, இவர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லியின் முதல் நோயாளி. தொழிலதிபரான இவர், தன் வேலை விஷயமாக இத்தாலி மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

“சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்த அறையை என்னால் நம்பவே முடியவில்லை. நான் நினைத்தற்கு நேர் மாறாக இருந்தது. நட்சத்திர விடுதிக்குக் குறையாமல் அந்த மருத்துவமனை இருந்தது. அங்கிருந்த பணியாளர்களும் ஒரு நாளுக்கு இரண்டு முறை தூய்மை செய்து வளாகத்தை மிகத் தூய்மையாக வைத்திருந்தார்கள்.

இளைஞரின் அலட்சியம்... எட்டு மாத குழந்தையையும் விடாத கொரோனா! - கண்காணிப்பு வளையத்தில் 355 பேர்

எனக்காகத் தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. போன் உபயோகப்படுத்தவும் பிரார்த்தனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. வீடியோ கால் மூலம் என் குடும்பத்தினரிடம் பேசினேன், இதனால் குடும்பத்தை விட்டுத் தனியாக இருக்கிறேன் என்ற சோகம் எனக்கு இல்லாமல் இருந்தது. மேலும் அங்கு இருந்த மருத்துவர்களும் பணியாளர்களும் எனக்கு மிகுந்த உதவியாக இருந்தனர். முதலில் எனக்கு வைரஸ் தொற்று உறுதியானதும் நான் அச்சம் கொண்டேன். இந்த வைரஸால் நான் உயிரிழக்கப் போவதாகவும் நினைத்துவிட்டேன். ஆனால் மருத்துவர்கள் வந்து வைரஸ் பற்றியும் எனக்கு அதன் தாக்கம் மிகக் குறைவாகவே உள்ளதாகவும் விளக்கினார்கள். அதன் பிறகே நிம்மதியடைந்தேன்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

அந்த மருத்துவமனையில் இருக்கும் நர்ஸ் மற்றும் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களுக்காக வேலை செய்து வருகிறார்கள். நான் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சர் தன்னிடம் பேசியதையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் எனக்கு போன் செய்து முதலில் என் உடல்நலம் பற்றி விசாரித்துவிட்டு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏதேனும் பிரச்னை உள்ளதா, மருத்துவமனை வசதியாக உள்ளதா, அங்கு கொடுக்கப்படும் உணவும் சுகாதாரமாக உள்ளதா என அனைத்தும் விசாரித்துத் தெரிந்துகொண்டார்.

மேலும் அவரும் பிரதமர் மோடியும் அனைத்து வைரஸ் பாதிக்கப்பட்டவர்களையும் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். அவர் என்னிடம் பேசியதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அவர் ஒரு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் நான் சாதாரண மனிதன். அவர் என்னைத் தொடர்புகொண்டு பேசியதை மறக்க முடியாது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு