Published:Updated:

`புரிதலுக்கு அப்பாற்பட்டது!' - அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு

அயோத்தி தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜாமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய இருப்பதாக அதன் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி கூறினார்.

அயோத்தி - உச்ச நீதிமன்றம்
அயோத்தி - உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்காக அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

அயோத்தி
அயோத்தி

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜாமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய இருப்பதாக அதன் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி கூறியிருக்கிறார். அந்த மனுவில் ஏற்கெனவே பதியப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கும் தவறுகள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 137ஆவது பிரிவின்கீழ் அதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

அதேபோல், வழக்கின் பல்வேறு தரப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு இந்துக்கள் தரப்பில் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு, இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் தரப்பில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் மறுசீராய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், தீர்ப்பை முழுமையாக மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று கோரவில்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அயோத்தி
அயோத்தி

இதுகுறித்து பேசிய மதானி, ``தீர்ப்பின் மீது மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யும் உரிமையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. எனவே, சீராய்வு மனு நிச்சயம் தாக்கல் செய்யப்பட வேண்டும். நாட்டிலுள்ள பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றே எண்ணுகின்றனர்.

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்பதே வழக்கில் முக்கிய வாதமாக வைக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. அதனால், அந்த இடம் இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என்பது நிரூபணமாகிறது. ஆனால், தீர்ப்பு இதற்கு நேர் எதிராக இருக்கிறது. எனவே, தீர்ப்பு புரிதலுக்கு அப்பாற்பட்டு இருப்பதாக நாங்கள் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய இருக்கிறோம்'' என்றார்.