Published:Updated:

`வன்முறைகளின் ஆசான் எங்கள் மீது பழிசுமத்துகிறது!’ -பா.ஜ.க-வை விமர்சித்த டெல்லி துணை முதல்வர்

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான போராட்டத்துக்குக் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுக்கு டெல்லி துணை முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி துணை முதல்வர்
டெல்லி துணை முதல்வர்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு நாடு முழுவதும் தொடர் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மக்கள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் பலவிதமான முறைகளில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதே குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மாதம் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்

இந்தப் போராட்டத்துக்குப் பிறகுதான் குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது நாடு முழுவதும் அதிகக் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்குக் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிதான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், ``டெல்லியில் நடந்த குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்துக்குக் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரே முக்கியக் காரணம். இரு கட்சிகளும் வன்முறையைக் கண்டிப்பதற்குப் பதிலாக அதைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தன.

`பா.ஜ.க அரசியலுக்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி!’ - சிசோடியா குற்றச்சாட்டும் காவல்துறை மறுப்பும்

ஜாமியா பல்கலைக்கழக வன்முறையில் காங்கிரஸின் ஆசிப் கான், ஆம் ஆத்மியின் அமானத்துல்லா ஆகியோர் மக்களைத் தூண்டிவிட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடியுரிமை சட்டம் கொண்டுவந்தால் இஸ்லாமியர்களின் புர்கா, தொப்பி, தாடி ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்படும் என்ற அளவுக்கு அமானத்துல்லா பேசியுள்ளார். இதற்கும் குடியுரிமை சட்டத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது. இதேபோன்ற வன்முறையைத் தூண்டிய இன்னும் பலர் விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மனிஷ் சிசோடியா
மனிஷ் சிசோடியா

இவரின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா, “ ஆம் ஆத்மி முற்றிலும் வன்முறைக்கு எதிரானது. எந்தக் கட்சி வன்முறையைத் தூண்டுகிறது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக வன்முறைகளின் ஆசான் (பா.ஜ.க) பிற கட்சிகள் மீது குறை கூறுகிறது.

டெல்லியில் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜவடேகர் பழைய பாடல்களையே பாடி வருகிறார். தேய்ந்த ரெக்கார்டுகள் மூலம், டெல்லித் தேர்தலில் எதுவும் செய்யமுடியாது என்பதை பிரகாஷ் ஜவடேகர் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.