Published:Updated:

பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம்! - முதலிடத்தில் அஸ்ஸாம்; கடைசி இடத்தில் கேரளம்

கர்ப்பிணி
கர்ப்பிணி

இந்தியாவில் கர்ப்பமான தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும் ஐ.நா நிர்ணயித்த அளவைவிட அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மார்கள் இறப்பு விகிதம் (Maternal mortality ratio) என்பது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பிரசவத்துக்கு முன்னும், பிறகும் தாய்மார்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் செயல்திறன். இதற்கான ஆண்டறிக்கை தயாரிப்பது 1990-ல் தொடங்கி தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் தாய் இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் ஐ.நா பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றது. ஆனால், இந்தியாவில் தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும் அது ஐ.நா நிர்ணயித்த விகிதத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்
தாய்

இந்தியாவில் 2015-17-ம் ஆண்டில் தாய் இறப்பது 122 ஆகவும் 2016-18-ல் 113 ஆகவும் குறைந்துள்ளது. இது முன்பைவிட 7.3% சதவிகிதம் குறைந்துள்ளது. இருந்தும் ஐ.நா நிர்ணயித்த 3.1 % என்ற இலக்குடன் ஒப்பிடுகையில் இது இருமடங்காக அதிகரித்துள்ளது. ஜூலை 16-ம் தேதி எம்.எம்.ஆருக்கான இந்தியப் பதிவாளர் ஜெனரல் வெளியிட்ட தரவுகளில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய எம்.எம்.ஆரை 70 ஆகக் குறைப்பதே ஐ.நா-வின் குறிக்கோள். 2017-ம் ஆண்டு 113 எம்.எம்.ஆரை 100 ஆக குறைக்கும் தேசிய சுகாதார கொள்கையின் இலக்கையும் இந்தியா தவறவிட்டுள்ளது.

மிக மோசமான தாய் இறப்பு கொண்ட மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட, அஸ்ஸாம் ஆகியவற்றில் எம்.எம்.ஆர் விகிதம் 175-லிருந்து 161 ஆக குறைந்துள்ளன. அதேபோல் தெற்கு இந்தியாவில் கர்நாடகாவைத் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் ஐ.நா நிர்ணயித்திருந்த தாய் இறப்பு விகித இலக்கை அடைய முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் இறப்பு
தாய் இறப்பு
மாதிரி புகைப்படம்

அதே நேரம் அஸ்ஸாமில் இந்த இறப்பு விகிதம் 215 ஆக உள்ளது. அதிலும் 2015-17-ம் ஆண்டில் மிக அதிகமாக 229 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக இறப்புகளுடன் அஸ்ஸாம் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களிலும் 197 இறப்புகளுடன் இந்த மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன. அதுவே கேரளாவில் தாய் இறப்பு விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் 66-லிருந்து 40 ஆக குறைந்துள்ளது. கேரளாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட 43 என்பதைவிட அங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே எம்.எம்.ஆர் உள்ளது. இருந்தும் அங்கு 2015-17-ம் ஆண்டில் 42 ஆக இருந்துள்ளது. இம்மாநிலம் இறப்பு விகிதத்தில் கடைசி இடத்தில் உள்ளது.

மொத்த இறப்புகளில் 20 - 24 வயதுக்குட்பட்ட பெண்களின் இறப்பு அதிகம் 33% ஆக உள்ளது. 25 - 29 வயதுக்குட்பட்ட பெண்களின் இறப்பு 32% ஆக உள்ளது. தாய்வழி இறப்புகள் தடுக்கக்கூடியவை இருந்தும் இது தொடர்பாகப் பெண்களிடம் போதுமான சுகாதார வசதி மற்றும் விழிப்புணர்வு இல்லாதது வருத்தமளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், கடுமையான ரத்தப் போக்கு, பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையால்தான் அதிக இறப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு