Published:Updated:

கார்கிலின் `சிங்கப் பெண்' - எல்லை ரோந்தில் கலக்கிய குன்ஜன் சக்சேனா!

அவளின் தந்தை எந்தப் பதற்றமுமின்றி அவளுக்கு வாழ்த்துகளைத் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டிக்கிறார்.

அது 1999 வருடத்தின் மே மாதம், அப்போதுதான் கார்கிலில் ஊடுருவல் என்ற செய்தியே வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனால், அதன் வீரியத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. அப்போதுதான் 25 வயதே நிரம்பிய பறக்கும் படை வீராங்கனையான குன்ஜன் சக்சேனாவுக்கு, உதாம்பூரிலிருந்து 132 ஃபார்வர்டு ஏரியா கன்ட்ரோல் விமானங்களுடன் ஶ்ரீநகர் செல்ல உத்தரவு வருகிறது.

ராணுவ அதிகாரியின் மகளான குன்ஜன் சக்சேனா, ஶ்ரீநகரில் நடக்கவிருக்கும் நிகழ்வினை ஆர்வத்துடன் எதிர்நோக்கி உற்சாகம் அடைகிறார். களத்துக்குச் செல்லும் முன், சக்சேனா தன் பெற்றோர்களிடம், `நான் உதாம்பூரிலிருந்து வெளியேறுகிறேன். சிறிது நேரத்துக்கு தொடர்புகொள்ள முடியாது' என்று கூறுகிறார். அவரின் தந்தை எந்தப் பதற்றமுமின்றி வாழ்த்துகளை சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டிக்கிறார்.

குன்ஜன், ஶ்ரீநகர் சென்ற பின்பும் இது முஜாகிதின் தீவிரவாதிகளின் சின்ன ஊடுருவலே என நினைக்கிறார். ஆனால், அவர் சென்றேபோதே அங்கு நான்கு ஹெலிகாப்டர்கள் விமானப்படைத் தளத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்தன.

கார்கில் போர்
கார்கில் போர்

பல ஆண்களுக்கு இடையே அவர் மட்டுமே பெண் விமான ஓட்டியாக நின்றார். இதனால், பலரின் புருவங்கள் அவரை நோக்கி உயர்ந்தன. இதுவரை சீட்டா ரக ஹெலிகாப்டர்களில் மட்டுமே பறந்துகொண்டிருந்த குன்ஜன், அப்போது போர் நடக்கும் பகுதியில் இயக்கப்பட இருந்த ஹெலிகாப்டர்களை இயக்க விமானப்படை தேர்வு செய்த 10 பைலட்களில் ஒருவர் ஆனார்.

பின்னர், இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் அதிகரித்தபோது உயரதிகாரி அவரிடம், `இங்கு பணிபுரிவதற்கு உனக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா?' என்கிறார். அதற்கு அவர், `எந்தச் சிக்கலும் இல்லை' எனக் கூறிவிட்டு ஶ்ரீநகரின் பதற்றமான இடத்திலேயே தொடர்ந்து பறக்கிறார். அப்போதுதான் அவரின் பெற்றோர், தங்கள் மகள் ஆபத்தான போர்களத்துக்கு மேலே பறந்துகொண்டிருக்கிறாள் என்பதையே உணர்கின்றனர். இருப்பினும் அவர்களது குடும்பமே ராணுவக் குடும்பம் என்பதால் , அவரின் எந்த ஒரு முடிவிலும் குடும்பத்தினர் தலையிடவில்லை .

போரின் தொடக்ககட்டத்தில் சிறிய மற்றும் திடமான சீட்டா ரக ஹெலிகாப்படர்கள் ரோந்துப் பணிக்காக உயரமாகப் பறந்து கொண்டிருந்தன. குன்ஜன், கார்கில் - தோலோலிங் - படாலிக் பள்ளத்தாக்குகளுக்கே மேலே ரோந்து செய்து தகவல்களை அனுப்பிக்கொண்டிருந்த விமானிகளுள் ஒருவராகப் பறந்து கொண்டிருந்தார். அந்தப் பறக்கும் படை அடிக்கடி இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் தூப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருந்த மலைப்பகுதிலேயே பறந்துகொண்டிருந்தது .

கார்கில் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் பல வீரர்கள் காயமடைந்த செய்தி வந்த வண்ணம் இருந்தது. ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. குன்ஜனும் தன் பங்குக்கு பல வீரர்களை மருத்துவ உதவிக்காகப் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றிக் கொண்டிருந்தார்.

குன்ஜன் சக்சேனா
குன்ஜன் சக்சேனா

சில சமயங்களில் 13,000 அடி உயரத்திலிருந்து ஹெலிபாட்களில் தரையிறங்கி வீரர்களைக் காப்பாற்றியுள்ளார். குன்ஜன் தரையிறங்கியவுடன் காயம்பட்ட வீரர்களைத் தனது ஹெலிகாப்டரில் ஏற்ற காத்துக்கொண்டிருப்பார். அவர்களை ஏற்றியவுடன் அவர்களை நோக்கி `தம்ப்ஸ் அப்' காண்பித்துவிட்டு ஹெலிகாப்டரை இயக்க ஆரம்பித்து விடுவார். காயம்பட்ட வீரர்களில் ஒரு சிலர் மட்டுமே அவர் பெண் என்பதை அறிந்திருந்தனர். அவர்களைப் பத்திரமாக ஶ்ரீநகர் கொண்டு செல்வதில் மட்டுமே குன்ஜன் கவனமாக இருந்தார். அந்தச் சமயத்தில் விமான ஓட்டிகள் தங்களது ஹெலிகாப்டர்களை எதிரிகள் சுடாமல் இருக்க கவனமாக ஓட்டுதல் வேண்டும். மேலும், இந்த வகை சீட்டாக்கள் எளிதில் உயரமாகப் பறந்தாலும், எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் திறன் அதனிடமில்லை. இதனால், விமான ஓட்டிகள் எதிரிகளிடமிருந்து தப்பிக்க தங்களிடம் எப்போதும் ஒரு பிஸ்டல் மற்றும் ரைபிள் ரக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டிருப்பர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கார்கில் எப்போதும் போர் தாக்குதல் நடந்துகொண்டே இருக்கும் பகுதியாக இருந்தது. ஒருமுறை குன்ஜன், விமானத் தளத்திலிருந்து தனது ஹெலிகாப்டரை இயக்கும்போது எதிர்பாராதவிதமாக எதிரியின் ஏவுகணை ஒன்று அவளது ஹெலிகாப்டரை நோக்கி வந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்தத் தாக்குதலில் அவரின் ஹெலிகாப்டர் தப்பியது. ஆனால், அதுகுறித்து சிறிதும் கவலைப்படாமல், அடுத்த நிமிடமே கடமையாற்றக் கிளம்பினார் அவர்.

சீட்டா வகை ஹெலிகாப்டர்களுக்கு உணவு வழங்குதலும் மருத்துவ சேவை ஆற்றுவதும் மட்டுமே வேலை அல்ல. எதிரி நாட்டின் இடங்களை வேவு பார்ப்பதும் உயரமான இடங்களில் பறந்து எதிரிகளைப் பற்றிய தகவல்களை முன்கள வீரர்களுக்கும், போர்விமானிகளுக்கும் வழங்குவதும் இவர்களது முக்கியமான வேலைகள். நாட்டுக்காக உயிரையே பணயம் வைக்கும் காலாட்படை வீரர்களின் உயிர்நாடியாக இவர்கள் திகழ்கிறார்கள்.

குன்ஜன் சக்சேனா
குன்ஜன் சக்சேனா

குன்ஜன் கார்கில்-தோலோலிங்-படாலிக் ஆகிய இடங்களைச் சுற்றி செயல்பட்டார். மேலும், இருபதே நாளில் 10-க்கும் மேற்பட்ட தாக்குதல்களையும் நடத்தியுள்ளார். அதன் பிறகு இந்திய விமானப் படை சிறிய ரக ஹெலிகாப்டர்களை போரிலிருந்து திரும்ப பெற்றுக்கொண்டு முழுமூச்சுக்கான தாக்குதலுக்கு ஆதரவு அளித்தது. இதனால் குன்ஜன், உதாம்பூருக்குத் திரும்பினார் .

விமானி குன்ஜனின் பணிக்காலம் கார்கில் போருக்குப் பிறகு நிரந்தர பணி ஆணையம் இல்லாத காரணத்தால் சிறிது காலத்திலேயே முடிவுக்கு வந்தது. விமானப் படையில் பணி புரியும் ஹெலிகாப்டர் பைலட் ஒருவரை குன்ஜன் மணமுடித்து குடும்ப வாழ்வுக்குத் திரும்பியுள்ளார்.

கார்கிலில் பணியாற்றிய ஒரே`சிங்கப்பெண்ணாக' வலம்வருகிறார் குன்ஜன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு