Published:Updated:

அயோத்தி: 2 கோடி மதிப்புள்ள நிலம் 10 நிமிடங்களில் 18.5 கோடிக்கு வாங்கப்பட்டதா?! - பின்னணி என்ன?

அயோத்தி ராமர் கோயில் மாதிரிப் படம்
அயோத்தி ராமர் கோயில் மாதிரிப் படம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், கோயிலுக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் அறக்கட்டளை நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாஜக-வின் கனவுத் திட்டங்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோயிலுக்குக் கடந்த 2019-ல் உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல் காட்டியதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி தலைமையிலான அரசு வரும் 2023-க்குள் முழுமையாகக் கட்டுமானப் பணிகளை முடிக்கத் தீவிரம் காட்டிவருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக முன்வைத்த மிக முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் அயோத்தி ராமர் கோயிலும் ஒன்று. கோயில் கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்காக மாநில அரசு தனி கமிட்டி ஒன்றையும் அமைத்தது. அதன் முழுப் பொறுப்பையும் 15 பேர் கொண்ட ராம ஜென்ம பூமி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தது. அந்த அறக்கட்டளையின் மேற்பார்வையின் கீழ்தான் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில், ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நிலம் வாங்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள்
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள்

இது தொடர்பாக, உ.பி சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த பவன் பாண்டே கூறுகையில், “உள்ளூர் பாஜக தலைவர்கள் மற்றும் சில அறக்கட்டளை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த நில மோசடி ஒப்பந்தம் நடந்துள்ளது. மார்ச் 18-ம் தேதி அந்த நிலம் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அதே நிலம் 10 நிமிட இடைவெளியில் 18.5 கோடிக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையால் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களையும் நான் வைத்திருக்கிறேன். 10 நிமிடங்களில் 16.5 கோடி விலை உயரும் அளவுக்கு அந்த நிலத்தில் என்ன தங்கம் விளைந்துவிட்டதா என்று தெரியவில்லை.

ஒப்பந்தம், பத்திரப்பதிவு ஆகிய இரண்டுக்குமே அறங்காவலர் அனில் மிஷ்ரா மற்றும் மேயர் ரிஷிகேஷ் ஆகியோர் சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது முறைகேடு நடக்கவில்லை என்று மறுக்க முடியாது. 10 நிமிடங்களில் 16.5 கோடி ஊழல் செய்துள்ளனர். ராமர் கோயிலுக்கு நிலம் என்ற பெயரில் ராமரின் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் முறையான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் ராமர் கோயிலுக்காக நன்கொடை வழங்கிவருகின்றனர். தங்களுடைய சேமிப்புகளிலிருந்து நன்கொடை வழங்கிவருகின்றனர். அந்த மக்களின் பணத்தில் நீங்கள் இவ்வாறு செய்வது அவர்களை அவமதிப்பதாகும்" என்று கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தைச் சாடினார்.

அதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பகவான் ராமரின் பெயரில் ஊழல் செய்வார்கள் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், ஆவணங்கள் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதைக் காட்டுகின்றன. நிலத்தின் விலை, விநாடிக்கு சுமார் 5.5 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எந்த நிலமும் ஒரு நொடியில் இவ்வளவு விலை உயர்ந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும்” என்றார்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவரும் நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் பக்தியால் கடவுளின் காலடியில் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த நன்கொடையைத் தவறாகப் பயன்படுத்துவது அநீதியானது. இது ஒரு பாவம்; பக்தர்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயல்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

எதிர்க்கட்சிகள் விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து கேள்வி எழுப்பி அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை நிர்வாகம் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. இது தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள அறக்கட்டளை பொதுச்செயலாளரும், விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவருமான சம்பத் ராய், "அயோத்தியில் ஏற்கெனவே உள்ள குழந்தை ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கிவருகிறோம். போக்குவரத்து எளிதாக இருப்பதற்காக, கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள நிலம் தேவைப்பட்டது. அதற்காக வீடுகளும், சிறு கோயில்களுமாக இருந்த அந்த நிலத்தை வாங்கினோம். அங்கு வசித்தவர்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்காக, அயோத்தியில் பாக் பிஜைசி என்ற இடத்திலுள்ள 12,080 சதுர மீட்டர் நிலத்தை அறக்கட்டளை வாங்கியது. அந்த நிலத்துக்கு ரூ.2.16 கோடி விலை என்ற அடிப்படையில், 2017-ம் ஆண்டு முதற்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. முன்பணமாக ரூ.92 லட்சம் கொடுக்கப்பட்டிருந்தது. அது, 2017-ம் ஆண்டின் சந்தை விலை அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலை என்பதால் குறைவாக இருந்தது. அப்போது, ராமர் கோயில் கட்ட அனுமதிப்பதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவில்லை. அந்தத் தீர்ப்பு, 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி வெளியானது. அதன் பிறகு நிலத்தின் மதிப்பு ஏறக்குறைய 10 மடங்கு கூடிவிட்டது. அதனால்தான், கடந்த மார்ச் மாதம் அந்த நிலத்தை ராமர் கோயில் அறக்கட்டளை வாங்கியபோது, விலை ஒன்பது மடங்கு அதிகரித்துவிட்டது.

நிலத்தின் உரிமையாளர்கள் 2017-ம் ஆண்டே அதை வாங்கியவர்களுக்குக் கடந்த மார்ச் மாதம்தான் பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர். அடுத்த சிறிது நேரத்தில், ராமர் கோயில் அறக்கட்டளைக்கு நிலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால், சந்தை விலையைவிடக் குறைவான விலையில்தான் அதை வாங்கியிருக்கிறோம். எனவே, நிலம் வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அதற்காக ஆதாயம் தேடவே எதிர்க்கட்சியினர் இது போன்ற பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு