Published:Updated:

போட்டியில் வென்ற மாடு... 16 கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்! - காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

மாட்டுக்குப் பிறந்தநாள்
News
மாட்டுக்குப் பிறந்தநாள்

மும்பை அருகே சண்டையில் வெற்றிபெற்ற எருமை மாட்டுக்கு அதன் உரிமையாளர் பிரமாண்டமான முறையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் ஐந்து பேருக்கு மேல் கூடக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆட்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளை மீறி சண்டையில் வெற்றிபெற்ற எருமை மாட்டுக்கு அதன் உரிமையாளர் மிகவும் பிரமாண்டமான முறையில் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்.

மும்பை அருகிலுள்ள பிவாண்டி அருகிலிருக்கும் வடுநவ்கர் என்ற கிராமத்தில் வசிப்பவர் கேதன் பல்ராம் பாட்டீல் (25). இவர் தனது வீட்டில் 10 வயதான எருமை மாடு ஒன்றைப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வளர்த்துவருகிறார். அதற்கு `ராஜா’ என்று பெயரிட்டு வளர்த்துவருகிறார். சமீபத்தில் வஜ்ரேஷ்வரி என்ற இடத்தில் எருமை மாடுகளிடையே சண்டைப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாட்டுச் சண்டை
மாட்டுச் சண்டை

இதில் ராஜா கலந்து கொண்டு வெற்றிபெற்றது. இதனால் ராஜாவின் உரிமையாளர் கேதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். எனவே தனது ராஜாவின் பிறந்தநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்தார். இதற்காக, தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரையும் விழாவுக்கு கேதன் அழைத்திருந்தார். பிறந்தநாள் விழாவுக்கு 500 பேர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ராஜாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். அதோடு விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து கேதன் கூறுகையில், ``ராஜாவை 10 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிவந்தோம். அதிலிருந்து அவனை நன்றாக கவனித்துக்கொள்கிறேன். எனது முழு நேரத்தையும் ராஜாவை கவனித்துக்கொள்ளச் செலவிடுகிறேன். ராஜாவுக்கு பிவாண்டியில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் பிறந்தநாளுக்கு கேக் வாங்கி வந்திருந்தனர். விழாவில் 16 கேக் வெட்டப்பட்டன” என்று தெரிவித்தார். எருமை, காளைப் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாகப் போட்டிகள் நடத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz