Published:Updated:

மாணவரைக் காக்க மனித கேடயமான மாணவிகள்! - ஜாமியா போராட்டத்தில் கவனம் ஈர்த்த கேரள மாணவி #video

மாணவி ஆயிஷா ரென்னா
மாணவி ஆயிஷா ரென்னா

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவலர்களை எதிர்த்த மாணவி இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தாலும் இதில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டமும் அதில் நடந்த கலவரமும்தான். அமைதியான முறையில் தொடங்கிய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அது வன்முறையாக மாறியது. இதில் பல மாணவர்கள், காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

கடந்த இரு தினங்களாக சமூகவலைதளத்தின் எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஜே.எம்.இ மாணவர்களின் போராட்டம்தான் புகைப்படங்களாகவோ, காணொலிகளாகவோ, செய்திகளாகவோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண்கள் துணிச்சலாக காவல்துறையினரை எதிர்கொள்ளும் வீடியோக்கள்தான் அதிக வைரல்.

ஒரு வீடியோவில், சில பெண்கள் மற்றும் ஒரு மாணவர் காருக்குப் பின்னால் மறைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியில் வரும்படி கூறுகிறார்கள். அப்போது ஒரு பெண் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அவரைக் கட்டுப்படுத்த வெளியில் வந்த மாணவரை திடீரென இழுத்துத் தாக்குகின்றனர் காவலர்கள்.

அனைத்துப் பெண்களும் ஓடிவந்து தன் நண்பரை பாதுகாக்கிறார்கள். அப்போது ஒரு பெண் மட்டும் போலீஸார் முன் விரலை நீட்டி மிரட்டும் தொனியில் பேசுகிறார். இந்த வீடியோவும் அதில் இடம் பெற்ற பெண்ணும் மாணவர்கள் போராட்டத்தில் அதிக கவனம் ஈர்த்தனர்.

அந்தப் பெண் போலீஸாரை எதிர்த்து பேசுவது போன்ற கார்ட்டூன்களும் புகைப்படங்களுமே ஜாமியா போராட்டத்தை முன்னிலைப்படுத்தின. இந்த நிலையில், அந்த வைரல் பெண் கேரளாவைச் சேர்ந்த ஆயிஷா ரென்னா என்பது தெரியவந்துள்ளது. 22 வயதான இவர் ஜாமியா பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்து வருகிறார். குடியுரிமைச் சட்டத்திருத்தம் தொடர்பான போராட்டத்தில் இவரும் பங்கேற்றுள்ளார்.

`யார் அந்த ரெட் டி ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ்?' - ஜாமியா வன்முறையில் சிக்கிய 10 ரவுடிகள்! #CAA

வைரல் வீடியோ தொடர்பாக பேசியுள்ள அவர், ``போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போது போலீஸ்காரர்கள், முன்வரிசையிலிருந்த மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது பின்வரிசையிலிருந்த நாங்கள் காவலர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு வீட்டுக்குள் சென்று அங்கிருந்த காருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டோம். நாங்கள் 9 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நண்பர் அந்த இடத்தில் இருந்தோம்.

மாணவி ஆயிஷா ரென்னா
மாணவி ஆயிஷா ரென்னா

அப்போது அங்கு வந்த சில காவலர்கள், `மாணவிகளை அடிக்கமாட்டோம், அங்கிருந்து வெளியில் வாருங்கள்’ எனக் கூறினார்கள். ஆனால், நாங்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டோம், அப்போது திடீரென என் நண்பரை இழுத்து வெளியில் போட்டு சரமாரியாக அடித்தனர். அதைத் தடுக்க எங்களையும் லத்தியால் அடித்தனர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அந்த வீடியோவில் தாக்கப்பட்ட மாணவர் சஹீம் அப்துல்லா கூறும்போது, ``நான் மாணவிகளுக்கு உதவி செய்வதற்காக அங்கு சென்றேன். அவர்களை வெளியே வருமாறு காவலர்கள் அழைத்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நான் மாணவிகளைத் தடுத்தேன். அப்போது காவலர்கள் என்னை வெளியில் இழுத்து என் மீது தாக்குதல் நடத்தினர். என்னைக் காக்கவே மாணவிகள் மனிதக் கேடயமானார்கள். இறுதியில் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது” எனப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு