Published:Updated:

அடித்துப் பிடித்து பொருள்களை வாங்குறவங்களே... இதையும் மனசில் வெச்சிங்கோங்க! #PanicBuying

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

``50 நாளுக்குத் தேவையான சர்க்கரைநோய் மாத்திரைகளை மொத்தமாக வாங்கிட்டேன்" என பெருமையடித்தார் பெரியவர் ஒருவர்.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவில் டாய்லெட் பேப்பர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சானிடைஸர்கள் தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலைமைக்கு மக்களின் தேவைக்கு அதிகமாகப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் பதற்ற குணமே காரணம் என்று சொல்லப்பட்டது. இதனால், ஒரு நபருக்கு இத்தனை அத்தியாவசியப் பொருள்களே தரப்படும் என வெளிநாடுகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

டாய்லெட் பேப்பர்
டாய்லெட் பேப்பர்

இது, உலக நாடுகளின் நிலையென்றால் தமிழகத்தின் நிலை இன்னும் கவலைக்குரியது. கொரோனா பாதிப்பால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டவுடனே மக்களிடையே பரபரப்பு உச்சம் தொட்டது. வீட்டில் சுருட்டி வைத்திருந்த கட்டைப்பைகளுக்கும் சாக்குகளுக்கும் உயிர் கொடுத்து சந்தைகளில் கூடினர். இன்றோடு உலகம் தன் இயக்கத்தை நிறுத்திவிடப்போகிறது என்பது போன்ற ஒரு பரபரப்பை எல்லாருடைய முகத்திலும் பார்க்க முடிந்தது. தனிமைப்படுத்துதல் எதற்காக அறிவிக்கப்பட்டது என்பதை மறந்து கூட்ட நெரிசலில் கிடைப்பதையெல்லாம் வாங்கி, பையில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.

இந்த ஊரடங்கு நாள்களில் தனிமனிதனாக என்னென்ன செய்யலாம்?

மருந்துக் கடை, ஏ.டி.எம், பலசரக்குக் கடைகள் என எல்லா இடங்களிலும் சில மீட்டர் தூரத்துக்கு வரிசை நீண்டது. அத்தியாவசியப் பொருள்கள்தான் கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறார்களே, அதன் பின்னும்கூட ஏன் இவ்வளவு பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்ற சந்தேகத்துடன் சிலரிடம் பேசியபோது, ``அட, ஊரடங்கு அறிவிச்சுட்டா பொருள்கள் எல்லாம் கிடைக்காதுப்பா, பாரு அதனால்தான் 50 நாளுக்குத் தேவையான சர்க்கரைநோய் மாத்திரைகளை மொத்தமாக வாங்கிட்டேன்" என பெருமையடித்தார் பெரியவர் ஒருவர்.

ராமநாதபுரத்தில் அலைமோதும் மக்கள்.
ராமநாதபுரத்தில் அலைமோதும் மக்கள்.

பதற்றமான சூழல்களில் தேவைக்கு அதிகமாகப் பொருள்கள் வாங்கிக் குவிப்பதை `பேனிக் பையிங்' என்று சொல்லப்படுகிறது. தேவைக்கு அதிகளவில் பொருள்கள் வாங்கும்போது, தேவைப்படுபவர்களுக்குக் கிடைக்குமா என்பதை மக்கள் யோசிப்பதில்லை. இதனால் பொருள்கள் பற்றாக்குறை, விலையேற்றம் போன்ற தேவையில்லாத சூழல் நிலவுகிறது. இதற்கு நாட்டில் நிலவும் சூழலைவிட, மக்களின் மனநிலையே முக்கியக் காரணமாக இருக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

அவசரக்கால சூழல்களில் மக்கள் பொருள்களை வாங்கச் செல்லும் முன் எவையெல்லாம் தேவை, எந்தப் பொருள்களையெல்லாம் வாங்க வேண்டும் என முன்பே பட்டியலிட்டுச் செல்வதில்லை. அதனால், கண்ணில்படும் பொருள்களையெல்லாம் வாங்கிக் குவிக்கிறார்கள். இதற்கு, தாங்கள் வாங்கும் பொருள் இப்போதைக்கு அவசிய தேவையில்லையென்றாலும், தேவைப்படும்போது கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமே முக்கியக் காரணம்.

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

மக்கள் பொருளை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கும் சூழலில், நாளை இன்னும் பற்றாக்குறை ஏற்படும், அப்போது இதைவிட அதிக விலைக்கு விற்க முடியும் என வியாபாரிகள் பொருள்களைப் பதுக்கி செயற்கையான பற்றாக்குறைச் சூழலை ஏற்படுத்தவும் மக்களின் பதற்றமே காரணமாக அமைகிறது.

அந்தப் பொருள் கிடைப்பதில்லை, இந்தப் பொருள் கிடைப்பதில்லை, பற்றாக்குறையால் நாளை முதல் எல்லா பொருளும் இரு மடங்குகூட விலையேற்றம் ஆகலாம் என்பது போன்ற வதந்திகளும் மக்கள் பொருள்களை வாங்கிக் குவிப்பதற்கு முக்கியமான காரணியாக மாறுகிறது.

பங்கின் விலை ஏற்றம்
பங்கின் விலை ஏற்றம்

தேவைக்கு அதிகமாகப் பொருள்களை வாங்கி வைத்து விட்டால் தட்டுப்பாடு ஏற்பட்டாலும்கூட பிரச்னையின்றி இருக்கலாம். சூழல் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என அடுத்தவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் தன் நலனைப் பற்றி யோசிப்பதும் காரணமாக அமைகிறது.

விலையேற்றமும் - பொருளாதாரப் பிரச்னைகளும்

மக்களின் இந்தச் செயல்பாட்டால் தேவைப்படுபவர்களுக்கு அந்தப் பொருள்கள் கிடைப்பதில்லை என்பதைத் தாண்டி பற்றாக்குறையினால் விலையேற்றம் செய்யப்படுவதும் முக்கியப் பிரச்னையாக மாறுகிறது. நேற்றைக்கு முந்தைய தினம் பத்து ரூபாய்க்கு விற்ற தக்காளி, அடுத்த நாள் மாலைக்குப் பின் கிலோ எண்பது ரூபாய்க்கு விற்கப்பட்டதற்குக் காரணம் பற்றாக்குறை ஏற்படும்போது வியாபாரிகள் தங்கள் நிர்ணயிக்கும் தொகையை விலையாக நிர்ணயிக்கிறார்கள் என்பதே.

கரன்சி விலை ஏற்றம்
கரன்சி விலை ஏற்றம்

அதிக விலையேற்றத்தால் பணப்புழக்கமும், செயற்கையான தட்டுப்பாடும், மக்களின் வாங்கும் திறனும் குறையும். பயத்தினால் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் அதிக பணத்தை வங்கிக் கணக்குகளிலிருந்து தேவைக்கு அதிகமாக எடுத்து வீட்டில் வைத்துள்ளனர். இதனால் பணத்தட்டுப்பாடு உருவாகவும் வாய்ப்பு உண்டு.

உலக நாடுகள் அனைத்திலும் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ள சூழலில் உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியாத அளவுக்கு மனிதவளத் தட்டுப்பாடும், பணத்தட்டுப்பாடுகளையும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்திய நிறுவனத்தின் பங்குகள் இன்னும் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.

இதரப் பொருள்கள்:
இதரப் பொருள்கள்:

இதுபோன்ற சூழல்களைத் தடுக்கவே, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட சூழலிலும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் என அரசால் அறிவிக்கப்பட்டது. மக்கள் எல்லோரும் தன்னுடைய நிலையை மட்டும் எண்ணாமல் நாட்டின் பதற்றமான சூழலை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. தேவைக்கு அதிகமான பொருள்களை வாங்கி மற்றவர்களுக்குக் கிடைக்காமல் செய்து, பொருள்களை வீணடிப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தமாகப் பணத்தை எடுக்காமல் தேவைப்படும் இடங்களில் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள்.

தனிமனித பொறுப்புடன் செயல்பட்டு எல்லாச் சிக்கல்களில் இருந்தும் மீண்டெழுவோம்.

அடுத்த கட்டுரைக்கு