Published:Updated:

யாருமே வாங்கத் துணியாத தாவூத் இப்ராஹிம் வீடு; வாங்கிய டெல்லி வழக்கறிஞர்! பின்னணி என்ன?

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம் வீட்டை வாங்கிய சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் அதனைக் குருகுல பள்ளியாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்.

மும்பையில் 1993-ம் வருடம் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார். மும்பையிலுள்ள அவரது சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்திருக்கிறது. மும்பை மட்டுமல்லாது அவரது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாகே என்ற கிராமத்தில் தாவூத் இப்ராகிம் குடும்பத்துக்கு வீடு மற்றும் நிலம் இருக்கிறது. இதனையும் கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் மத்திய அரசு பறிமுதல் செய்தது. அச்சொத்துக்களை மத்திய அரசு பல முறை ஏலம் விட்டது. ஆனால் தாவூத் இப்ராகிமுக்குப் பயந்து ஏலத்தில் கலந்துகொள்ள பொதுமக்கள் பயந்தனர். டெல்லியைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் அஜய் ஸ்ரீவஸ்தவா என்பவர் தாவூத்தின் ரத்னகிரி சொத்துக்களை ஏலத்தில் எடுத்தார்.

மும்பை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு! - தாவூத் இப்ராகிம் சகோதரர் இக்பால் மீண்டும் கைது
தாவூத் இப்ராகிம்
தாவூத் இப்ராகிம்

கடந்த வாரம் சொத்துக்களை முறைப்படி அஜய் ஸ்ரீவஸ்வதா பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ``தாவூத் இப்ராகிம் சொத்தில் குருகுல பள்ளியைத் தொடங்க முடிவு செய்திருக்கிறேன். இப்பள்ளியை சனாதன் தரம் பத்லசா டிரஸ்ட் நடத்தும். அக்கட்டடம் இனி ஸ்ரீசித்ரகுப்தா பவன் என்று அழைக்கப்படும். பத்திரப்பதிவு கடந்த வாரம்தான் முடிவடைந்தது. கட்டடத்தைப் புதுப்பிக்க இருக்கிறேன். 2001ம் ஆண்டு இந்தச் சொத்துக்களை நான் ஏலத்தில் எடுத்தபோது அதற்குப் பணம் கட்டக்கூடாது என்று சோட்டா சகீல் எனக்கு மிரட்டல் விடுத்தான்" என்று தெரிவித்தார். தாவூத்தின் சொத்து 29 ஆயிரம் சதுர அடி கொண்ட இரண்டு மாடி கட்டடம் ஆகும். இந்த வீட்டுக்கு எதிரில் 27 ஆயிரம் சதுர அடியில் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் தாவூத் குடும்பத்தினர் மாமரம் வைத்திருக்கின்றனர். இதுதொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த அக்பர் கூறுகையில், ``தாவூத்தின் குடும்பச் சொத்துக்கு அருகில் யாரும் செல்வது கிடையாது. தாவூத் குடும்பம் சொந்த ஊருக்கு வரும்போது இந்த வீட்டில்தான் தங்குவது வழக்கம்" என்றார். தாவூத் தந்தை இப்ராகிம் கேஸ்கர் விடுமுறை நாள்களில் தனது குடும்பத்துடன் இந்த வீட்டில் வந்து தங்கிவிட்டுச் செல்வது வழக்கம். 1980-ல் கட்டப்பட்ட இந்த வீடு இப்போது பாழடைந்து கிடக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு