Published:Updated:

`6 பேரால் 2 நாள்களாக பாலியல் வன்கொடுமை!' - பாதிக்கப்பட்ட சிறுமிக்கே தண்டனை கொடுத்த கிராம பஞ்சாயத்து

சத்யா கோபாலன்

பாலியல் வன்கொடுமை செய்தவர்களைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தண்டனை வழங்கியுள்ளது பீகாரில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து.

abuse
abuse

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 14-ம் தேதி மாலை ஒரு சிறுமி சாலையில் நின்றுகொண்டு இருந்துள்ளார். அந்த வழியாக காரில் வந்த ஆறு பேர் சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களிடமிருந்து சிறுமி தப்பிக்க முயன்றபோதும், அவரை வலுக்கட்டாயமாகப் பஞ்சாயத்துக் கட்டடத்தின் மேற்கூரைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

representational image
representational image

அந்தச் சிறுமியை இரண்டு நாள்களாக அதே கட்டடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த ஆறு பேரும் அங்கிருந்து தப்பிவிட, சிறுமி மட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக் கவனித்த பணியாளர் ஒருவர், உடனடியாக சிறுமியின் வீட்டுக்குத் தகவல் தெரிவித்து அவரை அழைத்துச் செல்லுமாறு சொல்லியுள்ளார்.

இதையடுத்து, சிறுமிக்கு அநீதி இழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டிய கிராம பஞ்சாயத்து, அதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கே தண்டனை வழங்கியுள்ளது. `பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அனைவரும் பஞ்சாயத்தாருக்கு நெருங்கிய உறவினர்களாக இருந்ததே இதற்குக் காரணம்' என்கின்றனர் ஊர் மக்கள்.

abuse
abuse

இதைவிடக் கொடுமை, தண்டனை என்ற பெயரில் சிறுமிக்கு மொட்டை அடித்து மொத்த கிராமத்தையும் சுற்றிவரச் செய்துள்ளனர். இதனால் கொந்தளித்த சிறுமியின் தாய், கயா மாவட்டக் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து நடந்த சம்பவங்களை விளக்கியிருக்கிறார்.

போலீஸ் வேடத்தில்
பாலியல் வன்கொடுமை...
பாதுகாப்பு இல்லாத என்.ஐ.டி வளாகம்!

சம்பவம் நடந்து 11 நாள்களுக்குப் பிறகு, பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீதும் சிறுமிக்குத் தண்டனை வழங்கியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்குத் தண்டனை வழங்கிய 5 பஞ்சாயத்தார்களையும் பாலியல் வன்கொடுமை செய்த கும்பலில் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

arrest
arrest

” சிறுமிக்குத் தண்டனை வழங்கிய ஐந்து பஞ்சாயத்தார்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமியைக் கடத்திய கும்பலைச் சேர்ந்த தேவ் லால் என்பவரை சிறுமியே அடையாளம் காட்டினார். அதனடிப்படையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்கிறார் மோஹான்பூர் காவல்நிலைய அதிகாரி ரவிபூஷன்.