Published:Updated:

`என் குழந்தைகளுக்கு எதிர்காலம் இல்லை; ஒரு தாயாக நிற்கிறேன்’ - டெல்லி போராட்டத்தில் குவிந்த பெண்கள்

பெண்கள்
பெண்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் பெண்கள், குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்க, தலைநகர் டெல்லியில் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் பங்குபெற்றனர். டெல்லி சஹீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டங்களைப் பெண்களே முன்னெடுத்துச் செல்கின்றனர். 18வது நாளாக அங்கு போராட்டம்க் தொடர்ந்து வருகிறது. பெண்கள் இரவு பகலாகப் போராட்ட களத்தில் இருக்கின்றனர்.

போராட்டம்
போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட சய்மா என்ற பெண் பேசுகையில், ``என் குழந்தைகளுக்கு எதிர்காலம் இல்லை என்பதை என்னால் காண முடிகிறது. ஒரு தாயாக, அவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற, நான் இங்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். எங்கள் உரிமைகள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது எனது சண்டை மட்டுமல்ல.

இது அரசியலமைப்பையும் காப்பாற்றுவது பற்றியது. ஆவணங்கள் இல்லாததால் நாடு முழுவதும் ஏராளமான இந்தியர்கள் பிரச்னைகளைச் சந்திப்பார்கள். என்னுடைய குழந்தையை உறங்க வைத்துவிட்டு இங்கு போராட்டக் களத்துக்கு வந்துள்ளேன். இதுவரை நான் எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை. இதுதான் நான் முதன்முதலாகப் போராட்டத்தில் பங்கேற்பது” என்றார்.

1 வயதுக் குழந்தையுடன் போராட்டத்துக்கு வந்திருந்த சஜீதா கான் பேசும்போது, ``நான் ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி. 2014-ம் ஆண்டு இங்கு பொலிட்டிகள் சயின்ஸ் படித்தேன். ஜாமியாவில் மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தப் பாகுபாடும் இல்லை. முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவுகளை வழங்கி வருகின்றனர். கடுமையான குளிர் நிலவி வருவதால் போர்வைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் போராட்டக்காரர்களுக்கு வழங்க தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். நேற்றைய போராட்டத்தின்போது அங்கிருந்த சிலர் இந்திய தேசியக்கொடிகளை கையில் ஏந்தியிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு