Published:Updated:

`பொதுச் சொத்துக்கு ஈடாக உங்கள் சொத்து கைப்பற்றப்படும்!’ - யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை #CAA

போராட்டத்தில் வன்முறையைத் தூண்டுபவர்கள் மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 9-வது நாளாக போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம், வன்முறை, தடியடி, கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு, கைது போன்ற பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடங்கிய எதிர்ப்பு தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறி நிற்கிறது.

போராட்டம்
போராட்டம்

டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற இடங்களில்தான் இந்தப் போராட்டம் அதிக வீரியம் பெற்றுள்ளது. இந்நிலையில், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பொதுச் சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ``ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. குடியுரிமை சட்ட எதிர்ப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் போன்றவை மொத்த நாட்டையும் தீக்குழியில் தள்ளுகின்றன. லக்னோ, சம்பால் பகுதியில் நடக்கும் வன்முறையைக் கண்டிப்புடன் கையாள்வோம். பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுபவர்களின் சொந்த உடைமைகள் பறிக்கப்பட்டு, அரசின் இழப்பைச் சரிசெய்ய அவை ஏலத்தில் விடப்படும்.

போராட்டம்
போராட்டம்

வன்முறையில் ஈடுபட்டவர்களின் சிசிடிவி வீடியோக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடக்கும் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் இது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். போராட்டத்தால் சாதாரண பொதுமக்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதை அறிவுறுத்தியுள்ளேன். குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது எந்த மதம் மற்றும் சமூகத்துக்கு எதிரானது அல்ல; இது நம் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும், வெளிநாட்டு அகதிகளுக்கு உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.