Published:Updated:

`கெஜ்ரிவால் கட்டுப்பாட்டில் திகார்; தேர்தல் லாப கணக்கு!’- டெல்லி அரசை சாடும் நிர்பயா பெற்றோர்

நிர்பயா தந்தை, அரவிந்த் கெஜ்ரிவால்
நிர்பயா தந்தை, அரவிந்த் கெஜ்ரிவால்

நிர்பயா வழக்கு விவகாரத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க ஏற்பட்டுள்ள கால தாமதத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவாலே காரணம் என நிர்பயாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடுமையான காயங்களுடன் சாலையோரம் தூக்கி வீசப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 13 நாள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு மாணவி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

போராட்டம்
போராட்டம்

இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு நீண்ட விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. கைதான 6 பேரில் ஒருவர், சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேருந்து ஓட்டுநர் ராம் சிங் 2013-ம் ஆண்டு சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள நால்வரும் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த நிலையில் வரும் 22-ம் தேதி நிர்பயா வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. முன்னதாக இதில் முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய மூன்று பேரும் தங்கள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் மேல்முறையீடு செய்யாமல் இருந்த அக்‌ஷய் குமார் என்பவரும் மனுத் தாக்கல் செய்தார், அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

நிர்பயா குற்றவாளிகள்
நிர்பயா குற்றவாளிகள்

இதற்கிடையில், குற்றவாளி முகேஷ் என்பவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பிவைத்துள்ளார். இவர் மனுத் தாக்கல் செய்துள்ளதால் வரும் 22-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற முடியாது என டெல்லி அரசு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு நிர்பயாவின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

`தயாராகும் தூக்கு மேடைகள்; ஒரே நேரத்தில் தூக்கு?' -நிர்பயா குற்றவாளிகளை நெருங்கும் தண்டனை

நிர்பயா இறந்து 7 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் முதல் முறையாக அவரது குடும்பத்தினர் டெல்லி அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இது பற்றிப் பேசியுள்ள நிர்பயாவின் தந்தை, ``என் மகள் இறந்தது முதல் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் உதவியும் செய்யாமல் தூங்கிக்கொண்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அவர்களும் குற்றவாளிகள் மீது ஒரு கண் வைத்துள்ளனர்.

நிர்பயா பெற்றோர்
நிர்பயா பெற்றோர்

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தற்போதுதான் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நிர்பயாவின் மரணத்தை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது டெல்லி அரசு. துணை முதல்வர் சிசோடியா, என் மகளின் மரணத்தை அவரது சொந்த வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார். அவர்களின் நலனுக்காகக் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்தியுள்ளனர். டெல்லியில் உள்ள காவலர்களின் அதிகாரத்தை எங்களிடம் வழங்கினால் அடுத்த 2 நாளுக்குள் நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிடுவோம் என சிசோடியா பேசியது மிகவும் மோசமானது.

எவ்வளவு நீளக் கயிறு... என்னென்ன பரிசோதனைகள்... எப்படி நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனை? #Nirbhaya

டெல்லியில் பெண்கள் நலனைப் பாதுகாப்பது பற்றி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதற்காக வாய் திறக்க மறுக்கிறார். இந்த வழக்கில் மத்திய அரசு எதுவும் செய்யமுடியாது. இது டெல்லி அரசின் பொறுப்பு. ஆனால், முதல்வர் கெஜ்ரிவால் இதைவைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார். நிர்பயாவுக்கு ஏன் நீதி வழங்குவதில் தாமதமாகிறது? இந்தக் கேள்வியை நான் மக்களிடம் கேட்க விரும்புகிறேன். ஏனெனில் இந்த விவகாரத்தை டெல்லி தேர்தல் வரை இழுத்துச் சென்று அதன் மூலம் தன் கட்சிக்கும் அரசுக்கும் நலன் பெற நினைக்கிறார் கெஜ்ரிவால். ஒருவேளை என் மகளுக்கு நீதி வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு கெஜ்ரிவால் மட்டுமே முழு பொறுப்பு” என்று கூறியுள்ளார்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

இவரையடுத்து பேசிய நிர்பயாவின் தாய், ``2017-ம் ஆண்டு குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவுடனேயே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தால் தற்போது தண்டனையே நிறைவேற்றப்பட்டிருக்கும். வரும் 22-ம் தேதியும் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றால் இனி எப்போதும் முடியாது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது மிகச் சரியானது. என் மகளுக்கு நீதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு ஆம் ஆத்மி அரசே முழு காரணம். திகார் சிறை முழுவதும் கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது என 2017-ம் ஆண்டு நீதிமன்றம் தெரிவித்ததை, நோட்டீஸாக குற்றவாளிகளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதை டெல்லி அரசுதான் செய்யத் தவறிவிட்டதுதான் இரண்டரை வருட காலதாமத்துக்கு காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு