Published:Updated:

`அழைப்பைக்கூட அதிகாரிகள் எடுப்பதில்லை!’ -ரயில் விபத்தில் அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள்

ரயில் விபத்து
ரயில் விபத்து ( Twitter )

``மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இதற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெட்கப்பட வேண்டும். தினமும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதற்கு முன்பாக அவர் உறுதியுடன் ஏதாவது செய்ய வேண்டும்”

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே தனது இயல்பு நிலையை இழந்து திணறி வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பைச் சுற்றிப் பல்வேறு பாதிப்புகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள்களிலிருந்தே இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்து வருகின்றனர். வேலைக்காகச் சென்ற இடத்தில் அனைத்துத் தொழில்களும் முடங்கியதால் உணவுக்குக்கூட கஷ்டப்பட்டு வந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குக் கால் நடையாக நூற்றுக்கணக்கான கி.மீ நடக்கத் தொடங்கினர். இவர்களில் சிலர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசுகள் ரயில் சேவைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. எனினும், சில தொழிலாளர்கள் நடந்து சென்றுகொண்டிருக்கின்றனர்.

ரயில் விபத்து
ரயில் விபத்து
ANI

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜால்னா பகுதியிலிருந்து அவுரங்காபாத் சென்றுகொண்டிருந்த தொழிலாளர்கள் நடந்த களைப்பில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் படுத்திருந்தவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்கள் தண்டவாளத்தில் இருப்பதைப் பார்த்த லோகோ பைலட் ரயிலை நிறுத்த முயன்றதாகவும் ஆனால், அதற்குள் ரயில் அவர்கள் மீது மோதியதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அண்டை மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு குறித்து பலரும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஊரடங்கால் மகாராஷ்டிராவில் சிக்கித் தவித்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர மத்திய அரசிடம் மத்தியப் பிரதேச மாநில அரசு மேலும் 31 ரயில்கள் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது எனக் கூறப்படுகிறது. எனினும், மகாராஷ்டிராவிலிருந்து செல்ல ஏராளமான தொழிலாளர்களுக்குப் பயணத்திற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜல்னா பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் குழுவோடு வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தங்களது சொந்த ஊரை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளனர். பல கி.மீ நடந்த சோர்வில் அவர்கள் ஓய்வெடுத்த போதுதான் இந்தக் கவலைக்குரிய சம்பவம் நடந்துள்ளது.

`ஊரடங்கால் ரயில் ஓடாது என நினைத்தார்கள்..' - அவுரங்காபாத் ரயில் விபத்து கொடூரத்தை விளக்கும் போலீஸ்

இந்தச் சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான வீரேந்தர சிங், ``மத்தியப் பிரதேசத்தில் உள்ள உமரியா மாவட்டத்தில் உள்ள எங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பவதற்காக அனுமதிகோரி விண்ணப்பித்தோம். ஒருவாரத்துக்கு முன்பே விண்ணப்பித்திருந்தாலும் இதுதொடர்பாக எந்தப் பதிலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார். பலியான தொழிலாளர்களில் ஒருவரான ராஜ் போஜ்கம் என்பவரின் தந்தை, ``அவன் இறந்துவிட்டதாக அரசு எங்களிடம் அறிவித்தது. எங்கள் பகுதியில் விவசாயம் அதிக அளவில் குறைந்துவிட்டதால்தான் அவன் ஜல்னாவுக்கு வேலைக்காகச் சென்றான்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். தீபக் என்பவரின் தந்தை, ``இரண்டு வயது மகன் அவனுடைய தந்தை வருவார் எனக் காத்திருக்கிறான். அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு எதுவும் தேவையில்லை. எல்லாவற்றையும் நாங்கள் இழந்துவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

திக் விஜய் சிங்
திக் விஜய் சிங்

பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்டு வர மாநில அரசு சார்பில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில், தீபாலி ரஸ்தோகி என்பவர் மகாராஷ்டிராவில் இருந்து தொழிலாளர்களை மீட்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அதிகாரிகளில் பெரும்பான்மையானவர்கள் தொலைபேசியை எடுப்பதே இல்லை என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் இந்தச் சம்பவம் தொடர்பாக பக்க சார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ``இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குறித்து பதிவுகளை செய்யும் மத்தியப் பிரதேச அரசு முயற்சி செய்ததா? ஆம் எனில், அவர்களைச் சொந்த மாநிலத்திற்கு அழைத்துவர அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது. மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெட்கப்பட வேண்டும். தினமும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதற்கு முன்பாக அவர் உறுதியுடன் ஏதாவது செய்ய வேண்டும்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

`களைப்பால் தண்டவாளத்தில் தூக்கம்’ -14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரைப் பறித்த காலி சரக்கு ரயில்
அடுத்த கட்டுரைக்கு