Published:Updated:

`என் கண் முன்னே அப்பாவை கொன்றுவிட்டனர்!’ - வீட்டு வாசலில் நின்றிருந்தவருக்கு நேர்ந்த சோகம் #CAA

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜலீலின் பிள்ளைகள்
ஜலீலின் பிள்ளைகள்

இந்தியாவில் கடந்த 10 நாள்களாக `குடியுரிமைச் சட்டம்’ என்ற வார்த்தை ஒலிக்காத மாநிலங்களே இருக்க முடியாது, அதைப் பற்றிப் பேசாத, விவாதிக்காத மக்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு இந்த வார்த்தை தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தம் நம் நாட்டின் மதச்சார்பின்மை என்பதை முற்றிலும் சிதைத்துவிடும் என்று மக்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.

மங்களூரு போராட்டம்
மங்களூரு போராட்டம்

பல இடங்களில் நடந்த மக்கள் போராட்டத்தில் திடீரென கலவரம் வெடித்ததால் பல நூறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் தாக்குதலிலும் சிக்கி நாடு முழுவதும் இதுவரை 22 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 17 வயது சிறுவன் முதல் போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் எனப் பலரும் உயிரிழந்துள்ளனர்.

அஸ்ஸாமில் தொடங்கிய இந்தப் போராட்டம் அடுத்த இரண்டு நாள்களில் டெல்லி பல்கலைக்கழகத்தில் எதிரொலித்தது. மாணவர்கள் போராட்டத்தில் கலவரம் வெடிக்கவே அந்தத் தீ நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பற்றிக்கொண்டது. இதேபோன்று கடந்த 19-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் மங்களூருவில் நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஒருவர் தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருக்கும்போது இறந்துள்ளார்.

போராட்டம்
போராட்டம்
Anupam Nath

மங்களூருவின் புந்தர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஜலீல். தினக்கூலியாக வேலை செய்துவரும் இவருக்கு 14 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஒரே நாளில் தன் குடும்பம் மொத்தமும் நிலைகுலைந்துபோன சம்பவத்தைப் பற்றி இந்தியா டுடே ஊடகத்திடம் தெரிவித்துள்ளார் ஜலீலின் மகள் ஷிஃபானி. ``அவர்கள் என் கண் முன்பே தந்தையைக் கொன்றுவிட்டனர்” எனக் கூறும்போதே சோகம் அவர் தொண்டையை அடைக்க அதன்பிறகு அழுதுகொண்டே இருந்துள்ளார். தொடர்ந்து அவரால் பேசமுடியவில்லை.

`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்?’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்

துப்பாக்கிச் சூடு நடந்த அன்று ஷிஃபானியும் அவரின் தம்பியும் பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பியுள்ளனர். மங்களூரின் பல பகுதிகளில் கலவரம் நடந்துகொண்டிருந்ததால் வேன் ஜலீலின் வீடு வரை வராமல் பாதையிலேயே சிறுவர்களை இறக்கி விட்டுள்ளனர். தன் பிள்ளைகளைப் பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் ஜலீல். சிறுவர்களை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு பின்னால் வந்த அவரின் இடது கண்ணை துப்பாக்கிக் குண்டு துளைத்துள்ளது. அதே இடத்தில் மயங்கி விழுந்த ஜலீல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

மங்களூரு போராட்டம்
மங்களூரு போராட்டம்

``மங்களூருவில் நடந்த போராட்டத்தில் ஜலீல் கலந்துகொள்ளவில்லை. தன் வீட்டிலிருந்த அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று நடந்த போராட்டத்தில் 7,000 முதல் 9,000 பேர் கொண்ட கும்பல் கலந்துகொண்டதாகக் காவலர்கள் பொய் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் அன்று வெறும் 50 முதல் 100 பேர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கூட காவலர்களால் கட்டுப்படுத்தமுடியவில்லை” என ஜலீலின் உறவினர்கள் காவலர்களைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.