Published:Updated:

`விரைவில் என்னை வரவேற்பார்கள்’ - கடும் எதிர்ப்புக்கு மத்தியில் எம்.பியாகப் பதவியேற்ற ரஞ்சன் கோகாய்

 ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையின் நியமன எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்.

உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகாய். அசாம் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 1978-ம் ஆண்டு தன் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். பின்னர் கவுஹாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து இறுதியாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார். கடந்த நவம்பர் மாதம் பதவி ஓய்வு பெற்ற இவரை மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் பதவிக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பரிந்துரைத்தார்.

 ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவையில் உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு அவை தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஆனால் இதை ஏற்காத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசு மற்றும் ரஞ்சன் கோகாய்க்கு எதிராகக் கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். இதற்கு மத்தியில்தான் கோகாய் பதவியேற்றார். மாநிலங்களவை எம்.பியாக ஒருவர் பதவியேற்றபோது எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. தன் பதவியேற்புக்குப் பிறகு , ‘எதிர்க்கட்சியினர் விரைவில் என்னை வரவேற்பார்கள்’ என்று கோகாய் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் கோகாய்-க்கு மாநிலங்களவை பதவி வழங்கிய பா.ஜ.க... நன்றிக் கடனா... மரபு மீறலா?!

ரஞ்சன் கோகாயின் பதவியேற்புக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவரின் நியமனம் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருப்பதாக முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் விமர்சித்துள்ளார். ‘என் 40 ஆண்டுக்கால நீதித்துறை வாழ்க்கையில் ரஞ்சன் கோகாய் போல ஒரு நபரைப் பார்த்ததில்லை’ என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு குற்றம்சாட்டியுள்ளார்.

 ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

இந்தியாவில் மிக முக்கிய வழக்குகளாகக் கருதப்பட்ட அயோத்தி வழக்கு, ரஃபேல் விவகாரம் போன்ற வழக்குகளின் தீர்ப்புகளில் ரஞ்சன் கோகாயும் ஒரு பகுதியாக இருந்தார். தற்போது இவருக்குப் பதவி வழங்கியதால் அந்தத் தீர்ப்புகளில் உள்நோக்கம் இருப்பதாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு