Published:Updated:

#TripleLockdown : `நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது!’ - கட்டுப்பாடுகளை இறுக்கும் கேரளா

திருவனந்தபுரம்
திருவனந்தபுரம்

கேரளாவில் கடந்த சில நாள்களாகக் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முறையாகக் கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு அம்மாநில அரசு எடுத்த கடுமையான தடுப்பு நடவடிக்கையால் அங்கு கொரோனா பரவல் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக இருந்தது கேரளாதான். சமீபத்தில் கேரளா கொரோனா இல்லாத மாநிலமாக இருந்தது, அந்த நேரத்தில் வெளிநாட்டில் வசித்துவந்த மக்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதால் கேரளாவில் மீண்டும் பரவல் உருவானது.

கொரோனா
கொரோனா
Pixabay

அதிலும், கடந்த சில நாள்களாக அங்கு வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. நேற்று அங்கு உறுதிசெய்யப்பட்ட 38 பாசிட்டிவ் நோயாளிகளின் கேஸ்களில் 22 பேர் யாருடனும் தொடர்பில் இல்லாமலும் பயண வரலாறு இல்லாமலும் இருந்துள்ளனர். குறிப்பாக, கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் கேரளம் முழுவதும் ஊரடங்கை நீட்டித்தும் திருவனந்தபுரத்தில் டிரிபிள் லாக்டௌன் (Triple Lockdown) அறிவித்தும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு திருவனந்தபுரத்தில் இந்த டிரிபிள் லாக்டௌன் அமலில் இருக்கும். இதன்படி கேரள தலைநகரில் எந்தவிதமான போக்குவரத்துக்கும் அனுமதியில்லை, மளிகை, பால் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியமான கடைகள் இயங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள் போன்றவை ஒரு வாரத்துக்கு மூடப்பட்டிருக்கும்.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

டிரிபிள் லாக்டௌனின் விளக்கமாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லாக் 1 - மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது. லாக் 2 - நோய்த்தொற்றின் ஹாட்ஸ்பாட்களாக உள்ள பகுதிகளில் மக்களைக் கட்டாயமாக வீட்டில் இருக்கச் செய்வது. லாக் 3 - பாசிட்டிவ் நபருடன் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் தொடர்பிலிருந்தவரை வீடு அல்லது அறையில் தனிமைப்படுத்துவது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா: `குவாரன்டீன் மைய மாடிக்குக் கயிறு கட்டி மது சப்ளை!’- அதிகாரிகள் அதிர்ச்சி

கேரளத்தில் பரவும் கொரோனா தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ``கொரோனாவால் திருவனந்தபுரம் குமுறும் எரிமலை போல மாறிவிட்டது. எந்த நேரத்திலும் வைரஸ் பரவல் வெடிக்கலாம். இங்கு கொரோனா சமூக பரவலாகாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. மாவட்டம் முழுவதும் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும்.

அமைச்சர் சுரேந்திரன்
அமைச்சர் சுரேந்திரன்

எனவே, மக்கள் எந்தக் காரணத்துக்காகவும் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. அத்தியாவசிய பணிகளுக்கு உரிய காரணத்துடன் அதிகாரிகளின் அனுமதி பெற்றே வெளியில் செல்ல வேண்டும். மருந்து சீட்டு இருந்தால் மட்டுமே மருந்து வாங்கவும் அனுமதிக்கப்படுவார்கள். தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

இவரையடுத்து பேசிய திருவனந்தபுரம் மேயர் ஸ்ரீகுமார், ‘ உள்ளூர் தொடர்புகளின் மூலம் கேரளத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதை நாங்கள் பார்க்கிறோம். இந்த நேரத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால் விஷயம் கட்டுப்பாட்டை மீறக்கூடும். திருவனந்தபுரத்தில் வைரஸின் நிலைமை தீவிரமடைந்து வருகிறது. அதனால் மக்கள் தேவையற்ற பயணம், கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். முகமூடி பயன்படுத்துவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றைக் கட்டாயமாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு