Published:Updated:

Air Crash: `முன் இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம்!’ - காயமடைந்தவரின் வேதனை

கேரளா
கேரளா ( AP )

கேரள விமான விபத்தில் காயமடைந்த 127 பேரும் கோழிக்கோட்டைச் சுற்றியுள்ள 13 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியாக `வந்தே பாரத்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2 மாதங்களாக இந்தத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டிலிருந்த லட்சக்கணக்கான மக்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதே திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று துபாயிலிருந்து புறப்பட்டு கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தை நோக்கி வந்தது. கோழிக்கோட்டில் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கேரளா
கேரளா
AP

இதில் பயணித்த 184 பேரில் 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். 127 பேர் படுகாயங்களுடன், கோழிக்கோட்டைச் சுற்றியுள்ள 13 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த கறுப்புப் பெட்டி இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Air Crash: `மழையையும் கொரோனா அச்சத்தையும் மீறிய மனிதநேயம்!’ - நெகிழவைத்த கேரளம்

இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி மீண்ட ஒருவர் தனக்கு நேர்ந்த திகில் அனுபவத்தைப் பற்றி ஏ.என்.ஐ ஊடகத்திடம் பேசியுள்ளார். அதில், ``இது மிகவும் கோரமான விபத்து, விமானம் விபத்துக்குள்ளாகப் போகிறது என்பதை அறிந்தவுடன் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள முன் இருக்கையை மிகவும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே அடுத்த சில விநாடிகளில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி இரண்டு துண்டானது. விபத்துக்குப் பிறகு என்னைச் சுற்றியிருந்த பலரின் அலறல் சத்தமும் அழுகையும் கேட்டுக்கொண்டே இருந்தது.

கேரளா
கேரளா
AP

சிலர், இரண்டு விமானிகளும் இறந்துவிட்டதாகக் கூறினர், யாரோ ஒருவர் 2 பெண்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால், இன்று காலை செய்தித்தாள் பார்த்தபோது 17-18 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்துக்கு மோசமான வானிலைதான் காரணம். விமானத்தைத் தரையிறக்குவது சாத்தியமில்லாமல் இருந்தால் அவர்கள் வேறு ஒரு விமான நிலையத்தில் தரையிறக்க முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை, நேற்று நடந்தது மிகவும் அதிசயமாக இருந்தது. அனைத்தும் கனவு போலவே உள்ளது. ஒருவேளை இப்படி நடக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்” என வேதனையுடன் பேசியுள்ளார்.

கேரளா: `பழுதான லேண்டிங் கியர்; இரண்டாகப் பிளந்த விமானம்!' - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அடுத்த கட்டுரைக்கு