Published:Updated:

`தினக்கூலி தொழிலாளர்களின் நிலை?’ -அச்சத்தை ஏற்படுத்திய ஆனந்த் விகார் பேருந்துநிலைய காட்சிகள் #Corona

ஆனந்த் விகார் பேருந்து நிலையம்
ஆனந்த் விகார் பேருந்து நிலையம்

தொழிலாளர்களுக்கு தான் கொரோனா குறித்து தெரியவில்லை என்றால் அங்கு இருந்த அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தொடுவதற்கு முன்னதாகவே நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசியத் தேவைகள் அன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. மீறி சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
AP

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தினசரி கூலி தொழிலுக்குச் செல்பவர்கள். அவர்கள் இந்த லாக்-டவுன் உத்தரவால் பெரும் இன்னலைச் சந்தித்து வருகிறார்கள். பலரும் தங்கள் சொந்த ஊரை விட்டு வேறு இடத்தில் பணியாற்றுவதால் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புவதும் பெரும் சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பல தொழிலாளர்கள் தினமும் உணவு கூட இல்லாமல் 100 கிலோ மீட்டர் நடப்பதாக தகவல்கள் வெளியானது.

`தினமும் 100 கி.மீ நடை.. இரு கன்டெய்னர் லாரியில் 300 பேர்!’ -தினக்கூலி தொழிலாளர்களின் அவல நிலை

இதற்கு முக்கிய காரணம், அவர்கள் பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பற்ற முறையில் தங்கி இருக்கிறார்கள். வேலை இல்லாததால் அவர்களிடம் பணமும் இல்லை. லாக்-டவுன் காரணமாக சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியாத சூழல். பணி செய்யும் இடத்திலும் வாழ முடியாத சூழலில் சொந்த ஊர்களுக்கு நடைபயணமானார்கள். பசியுடனும் தாகத்துடனும் மக்கள் பயணம் செய்தது பார்பவர்களை கலங்கச் செய்தது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி மனதை ரணமாக்கியது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

இந்த நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி மாநில அரசுகள் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. இதனை தொடர்ந்து தினக்கூலி தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையம் நோக்கி பயணமானார்கள்.

உத்தரபிரதேசம் - டெல்லி எல்லை அருகே உள்ள ஆனந்த் விஹார் என்னும் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் குவிந்தார்கள். குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு இருந்ததாக தெரியவில்லை என பலரும் ஆதங்கப்பட்டனர்.

ஆனந்த் விகார்
ஆனந்த் விகார்

காரணம், கொரோனா பரவலை தடுக்க முக்கியமானதாக பார்க்கப்படும் `இடைவெளி’ என்பது அங்கு சுத்தமாக இல்லை. கூட்டம் கூட்டமாக சுமார் 2 கிலோ மீட்டருக்கு மக்கள் கூட்டம் பேருந்துக்காக காத்திருந்தது. அங்கு இருந்த பலரும், உ.பியின் பிற பகுதிகள், பிகார், டெல்லி, ராஜஸ்தான், உள்ளிட்ட பகுதிகளை தங்கள் சொந்த இடங்கள் எனத் தெரிவித்தனர்.

தொழிலாளர்களுக்கு தான் கொரோனா குறித்து தெரியவில்லை என்றால் அங்கு இருந்த அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 70 பேர் அமரக்கூடிய பேருந்தில், பெருந்தொற்று காலத்தில் சுமார் 100 பயணிகள் தங்களின் பெரிய பெரிய பெட்டிகளுடன் நெருங்கி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இரவிலும் கூட்டம் குறையவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக நெருக்கமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள், அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆனந்த் விகார்
ஆனந்த் விகார்

மேலும் பெரும்பாலான நேரம் தெர்மல் ஸ்க்ரீனிங் என்னும் பரிசோதனையும் அங்கு செய்யப்படவில்லை. மதியம் 3.30 மணிக்கெல்லாம், மதியம் இருந்த கூட்டத்தை காட்டிலும் சுமார் மூன்று மடங்கு கூட்டம் கூடியது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்குவதில் அதிகாரிகள் திணறினர். சில இளம் தொழிலாளர்கள் நடந்து செல்லும் முடிவை எடுத்தனர். அவர்கள் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும் எனவும், 21 நாள்கள் இங்கு தங்கியிருந்தாலும் தங்களிடம் பணம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

`தினமும் 100 கி.மீ நடை.. இரு கன்டெய்னர் லாரியில் 300 பேர்!’ -தினக்கூலி தொழிலாளர்களின் அவல நிலை

நாடு முழுவதும் கொரோனா குறித்த அச்சம் நிலவி வரும் இந்த சூழலில் தொழிலாளர்களின் இந்த பாதுகாப்பற்ற பயணம், நிலைமையை இன்னும் மோசமாக்கும் என அச்சம் தெரிவிக்கிரார்கள் சமூக ஆர்வலர்கள். அரசு போதுமான ஏற்பாடுகளை செய்து டோக்கன் முறையில் மக்களை பேருந்து நிலையத்துக்கு வர வைத்திருக்க வேண்டும் போன்ற கருத்துகள் கூறப்படுகிறது. ஆனந்த் விகார் பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு