Published:Updated:

ஹைதராபாத்: `2 லிட்டர் ஆக்ஸிஜன் இருந்தால் உயிருடன் இருந்திருப்பார்!’ - கொரோனா வார்டு அதிர்ச்சி

மருத்துவமனை
மருத்துவமனை ( AP (மாதிரிப் புகைப்படம்) )

``காலை 9 மணி முதல் மாலை 3 மணிக்குள் குறிப்பிட்ட இடைவெளிக்குள் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சில நோயாளிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டும் இருந்துள்ளனர்.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் அதிக பதற்றத்தையே மக்களிடம் உருவாக்கி வருகிறது. பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகி வருகின்றன. இதனிடையே, மருத்துவமனைகளில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியையும் கவலையையும் அளித்த வண்ணம் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் போதிய வகையில் இருப்பதாகவும் முன்னெச்சரிக்கையுடன் கூடுதலாக வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறி வந்தாலும் படுக்கை வசதிகள் பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான குளறுபடிகள் இருப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
Claudio Furlan/LaPresse

ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனை கட்டடம் ஒன்றில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா தனிமைப்படுத்தும் வார்டு உள்ளது. இங்கு கொரோனா பாஸிட்டிவ் இல்லாத ஆனால், மூச்சுத் திணறலால் பாதிப்படைந்த நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தப் படுக்கைகளில் 70 முதல் 80 படுக்கைகள் ஆக்ஸிஜன் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆக்ஸிஜன் வழங்குவது தொடர்பான பிரச்னைகள் ஏற்கெனவே இருந்து வந்ததாகவும் கடந்த திங்கள் கிழமை இந்தப் பிரச்னை தீவிரமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்தக் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக நேற்று உயிரிழந்துள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 3 மணிக்குள் குறிப்பிட்ட இடைவெளிக்குள் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சில நோயாளிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டும் இருந்துள்ளனர்.

மருத்துவர் பரிந்துரையில்லாமல் வாங்கக்கூடிய OTC மருந்துகள்... கவனிக்க வேண்டியவை!

காலையில் இருந்து ஆக்ஸிஜன் குழாயில் மிகவும் மெதுவாக ஆக்ஸிஜன் ஓட்டம் இருந்து வந்ததையும் சில குழாய்களில் ஆக்ஸிஜன் ஓட்டம் நின்றதையும் மருத்துவர்கள் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனினும், விரைவில் இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை பிரச்னைகள் தீரவில்லை என்றே தெரிகிறது. இதையடுத்து பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் மிகவும் பாதிப்படைந்த நோயாளிகளை வேறு வார்டுக்கு மாற்ற முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. மாற்றப்பட்ட பகுதிகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்துள்ளது என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ``ஆக்ஸிஜன் வழங்கும் நிறுவனங்களை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அதற்குள் 30 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு லிட்டர் ஆக்ஸிஜன் அவருக்கு கிடைத்திருந்தால் உயிருடன் இருந்திருப்பார்” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி மருத்துவர்கள்
இத்தாலி மருத்துவர்கள்
AP

மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் இந்தப் பிரச்னை தொடர்பாக பேசும்போது, ``வார்டில் உள்ள நோயாளிகளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் தேவை ஏற்படுகிறது. தினமும் ஒன்று முதல் இரண்டு உயிரிழப்புகளை வரை ஏற்படுகின்றன. அவர்களை வேறொரு வார்டுக்கு மாற்றுவதற்குள் இறந்துவிடுகிறார்கள். எனினும், அவர்களுக்கு அதிக ஆக்ஸிஜன் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள ஆக்ஸிஜன் குழாய்களின் அளவை விரிவுபடுத்தவும் முயற்சிகளை செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளின் மீது தொடர்ந்து இதுமாதிரியான குற்றச்சாட்டுகள் எழுவது பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

உ.பி: `உதவிக்கு யாரும் வரவில்லை!’ - மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த நோயாளி
அடுத்த கட்டுரைக்கு