Published:Updated:

`தயாராகும் தூக்கு மேடைகள்; ஒரே நேரத்தில் தூக்கு?' -நிர்பயா குற்றவாளிகளை நெருங்கும் தண்டனை

நிர்பயா வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கும் தண்டனை விதிப்பதற்காக தூக்கு மேடை தயாராவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தூக்கு
தூக்கு

இந்தியத் தலைநகர் டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடுமையான காயங்களுடன் சாலையோரம் தூக்கி வீசப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

13 நாள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு மாணவி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோஷங்களுடன் டெல்லி சாலையில் திரண்ட மக்களால் இந்தியத் தலைநகரமே திணறியது.

நிர்பயா வழக்கு  குற்றவாளிகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீண்ட விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. தற்போது டெல்லி திகார் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான 6 பேரில் ஒருவர், சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேருந்து ஓட்டுநர் ராம் சிங் 2013-ம் ஆண்டு சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் நிர்பயா வன்கொடுமை விவகாரத்தில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது உச்சநீதிமன்றம்.

இதில் முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய மூன்று பேரும் தங்கள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். ஆனால், இவர்கள் மூவரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேல் முறையீடு செய்யாமல் இருந்த அக்‌ஷய் குமார் என்ற குற்றவாளியும் 2019-ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவும் நிராகரிக்கப்பட்டு நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்படலாம் என திகார் சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தூக்கு கயிறு
தூக்கு கயிறு
மாதிரி புகைப்படம்

இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் பீகார் மாநிலத்தில் உள்ள பக்சார் மத்திய சிறைக்கு ஒரு உத்தரவு சென்றுள்ளது. அதன்படி `10 தூக்குக் கயிறுகள் வேண்டும், கயிறு தயாரிக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவில் தூக்குக் கயிறு தயாரிக்கும் வசதி கொண்ட சிறைச்சாலைகளில் பக்சார் சிறையும் ஒன்று என்பதால் இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இந்தச் சமயத்தில் நிர்பயா வழக்கைத் தவிர வேறு யாருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை என்பதால், கயிறுகள் நிர்பயா குற்றவாளிக்காகத் தயாராகலாம் எனக் கூறப்பட்டது.

வலுக்கும் மரண தண்டனை குரல்கள்; தயாராகும் 10 தூக்குக் கயிறுகள்! -பீகார் சிறைக்குப் பறந்த உத்தரவு

இந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும்விதமாக மற்றொரு தகவலும் திகார் சிறையிலிருந்து கசிந்துள்ளது. இந்தியாவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் சிறைகளில் திகார் சிறையும் ஒன்று. பெரும்பாலும் இங்குள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் ஒரே ஒரு தூக்குமேடை மட்டுமே உள்ளது. திகார் சிறையும் இதே நிலையிலேயே உள்ளது. ஆனால், தற்போது நிர்பயா வழக்கில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரையும் ஒரேநேரத்தில் தூக்கிலிட, திகார் சிறையில் புதிதாக மேலும் சில தூக்கு மேடைகள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகார் சிறை
திகார் சிறை

சில நாள்களுக்கு முன்பு ஜே.சி.பி இயந்திரம், திகார் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு மேடை கட்டும் பணிகள் மற்றும் குழிகள் தோண்டும் பணிகள் நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூக்குக்குப் பிறகு அவர்களின் உடல்களைப் புதைப்பதற்காகக் குழிகள் தோண்டப்படலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

`ஒருவேளை நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரும் ஒரேநேரத்தில் தூக்கிலிடப்பட்டால் அது இந்தியாவில் நடக்கும் முதல் கூட்டுத் தூக்குத் தண்டனை நிறைவேற்றமாக இருக்கும்' எனக் கூறப்பட்டுள்ளது.