Published:Updated:

`சரியான நேரத்துக்கு உணவு, மருந்து கொடுங்கள்!’ -டெல்லி முதல்வருக்கு, தமிழக முதல்வர் வேண்டுகோள்

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழக இஸ்லாமியர்களுக்கு, 'சரியான நேரத்தில் உணவு, மருந்து வழங்கி உதவ வேண்டும்' என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில், வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை தேசிய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,668 -ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 775-ஆகவும் உள்ளது. மேலும், வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,062 -ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த மாதம் அங்கு நடந்த தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கூட்டம் முடிந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய பலருக்கும் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்து. அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 559 இஸ்லாமியர்கள் டெல்லியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்து, முறையாகக் கவனித்துக் கொள்ளுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடிதம்
கடிதம்

இது தொடர்பாக தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், “ தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற 599 தமிழக இஸ்லாமியர்கள், டெல்லியின் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு இருப்பவர்களில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சரியான நேரத்துக்கு உணவு கிடைக்காமல் காலதாமதமாக அளிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

`நான் மட்டும்தான் ராஜா!' எம்.ஜி.ஆர். பாணியில் எடப்பாடி பழனிசாமி

மேலும், டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான பாதுகாப்பு, மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும். அங்குள்ளவர்களுக்கு வேறு உடல்நல பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் மருத்துவ உதவிகளைச் சரியான நேரத்தில் வழங்க வேண்டும். அதேபோல், ரமலான் நேரத்தில், இஸ்லாமிய மக்களுக்குத் தேவையான உணவுகளைக் கொடுத்து, கூடுதல் கவனத்துடன் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு