Published:Updated:

`மதுவுக்கு முன்னோட்டமாக கள்ளுக்கடைத் திறப்பு!' - கேரளாவில் கணநேரத்தில் காலியான பாட்டில்கள்

கள்ளு
கள்ளு ( மாதிரி படம் )

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில்தான் அதிகளவு கள் கிடைக்கிறது. பனை, தென்னை ஏறும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு 13-ம் தேதி முதல் கள் இறக்க பினராயி விஜயன் அரசு அனுமதியளித்திருந்தது.

கேரளாவில் ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 50 நாள்களாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், கேரளாவில் பினராயி விஜயன் அரசு மதுக்கடைகளை திறக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், வரும் 18-ம் தேதி முதல் கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுவை ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்தும் கேரள அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில், நேற்று கேரளாவில் பெரும்பாலான கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. திருவனந்தபுரம், கண்ணுர், கொல்லம் மாவட்டங்களைத் தவிர பிற 11 மாவட்டங்களில் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கடையில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூடக் கூடாது என்று கேரள அரசு வலியுறுத்தியது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கள்ளுக்கடைகளைத் திறக்க அனுமதியளித்திருந்தது. நேற்று கடை திறந்த சில மணி நேரங்களிலேயே கள்ளுக்கடையில் இருந்த பாட்டில்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. இத்தனைக்கும் நபர் ஒன்றுக்கு 1.5 லிட்டர் மட்டுமே விற்க வேண்டுமென்று கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும், பெரும்பாலான கடைகளில் ஸ்டாக் குறைவாக இருந்ததால், பாட்டில்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில்தான் அதிகளவு கள்ளு கிடைக்கிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் 850 கடைகள் உள்ளன. பனை, தென்னை ஏறும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு 13-ம் தேதி முதல் கள் இறக்க பினராயி விஜயன் அரசு அனுமதியளித்திருந்தது.

`உங்கள் எச்சரிக்கையை ஏற்க முடியாது!’ -மருத்துவ ஆலோசகருடன் நேரடியாக மோதும் ட்ரம்ப்

கேரளாவில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தென்னை ஏறுபவர்களும் வேலைக்குச் செல்லவில்லை. இதனால், கள் இறக்கும் தொழிலும் நசிந்து போயிருந்தது.

பனை மரம்
பனை மரம்

கள் பானத்தில் 5 முதல் 8 சதவிகிதம் வரை ஆல்கஹால் உள்ளது. 750 மி.லிட்டர் பாட்டிலை 70 ரூபாய்க்கு கேரள அரசு விற்பனை செய்கிறது. கேரளாவில் 20,000 பனை மற்றும் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளனர். நாள் ஒன்றுக்கு 3,00,000 லிட்டர் கள் சேகரிக்கப்படுகிறது. கள்ளுக்கடைகளில் 8,000 பேர் வரை பணிபுரிகின்றனர். கள்ளுக்கடையை ஒட்டியுள்ள சிறிய பெட்டிக் கடைகளை நம்பியும் ஏராளமான குடும்பங்கள் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு