Published:Updated:

`பொதுப் பிரச்னைகளில் பெண்களை இழுக்காதீர்கள்!' - சந்திரபாபுவுக்கு ஆதரவாக ஜூனியர் என்டிஆர் வீடியோ

``நாம் பேசுகின்ற வார்த்தைகள் அனைத்தும் நம்முடைய ஆளுமையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றன. அரசியலில் விமர்சனங்களும், கருத்தை வெளிப்படுவதும் இயல்பானவை. ஆனால் அவை அனைத்தும் பொதுப் பிரச்னைகள் பற்றியதாக இருக்க வேண்டும், தனி மனிதத் தாக்குதலாக இருக்கக்கூடாது." - ஜூனியர் என்டிஆர்

கடந்த வாரம் ஆந்திர சட்டசபையில் தெலுங்கு தேசக் கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரை, அவர் மனைவி புவனேஸ்வரியை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, சட்டசபையை விட்டு எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியேறினார். ஆந்திர மாநிலத்தின் மொத்த அரசியலிலும் கலக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த சம்பவம் குறித்து பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தன் கருத்தைக் காணொளியாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு
கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு
``முதல்வராகி விட்டுத் தான் மீண்டும் சட்டசபைக்குள் நுழைவேன்!" - கண்ணீருடன் சபதமிட்ட சந்திரபாபு நாயுடு

ஆந்திர சட்டசபையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் பல விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில், ஆளும் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவிற்கும் ஏற்பட்ட விவாதத்தில், ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியினரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாகப் பேசியதுடன், தனிமனித தாக்குதல் நடத்தியதாகவும், சபாநாயகர் இதுகுறித்து எதுவுமே பேசாமல் மௌனமாக இருந்ததாகவும் கூறி, சந்திரபாபு நாயுடு சட்டசபையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இனி முதல்வராகாமல் சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்கமாட்டேன்" என சபதமிட்டார்.

இதனையடுத்து ஆந்திராவின் பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துகளைக் கூறிவரும் வேளையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனிமனித தாக்குதல்கள் குறித்தும், பெண்களைப் பற்றி இழிவாக பேசியதற்கு எதிராகவும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

``நாம் பேசுகின்ற வார்த்தைகள் அனைத்தும் நம்முடைய ஆளுமையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றன. அரசியலில் விமர்சனங்களும், கருத்தை வெளிப்படுவதும் இயல்பானவை.

ஆனால் அவை அனைத்தும் பொதுப் பிரச்னைகள் பற்றியதாக இருக்க வேண்டும், தனி மனிதத் தாக்குதலாக இருக்கக்கூடாது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், ``தற்போது நடந்த இந்த சட்டசபை சம்பவம் என்னை மிகவும் புண்படுத்தியுள்ளது. எப்போதெல்லாம் பொதுப் பிரச்னைகளைப் பற்றி பேசுகின்றோமோ அப்போதெல்லாம் பேச வேண்டிய கருத்துகளைப் புறந்தள்ளி, தனிப்பட்ட விமர்சனங்களுடன் பெண்களை பொது பிரச்னைகளுக்குள் இழுக்கிறோம்.

``கருணாநிதி போன்ற தலைவர்களுடன் வேலை செய்தவன் நான்"... கண்ணீர்விட்ட சந்திரபாபு நாயுடு - காரணம் என்ன?

அது நம்மை அராஜகத்திற்குக் கொண்டு செல்லும். இது மிகவும் தவறானது. பெண்களை மதிப்பது நமது கலாசாரம், அது நமக்குள் பொதிந்துள்ள ஒரு பாரம்பர்யம். அந்தப் பாரம்பர்யத்தைதான் நாம் நமது வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்ல வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு