Published:Updated:

`2 ஆண்டுகள்; 14 தீவிரவாத கமாண்டோக்கள்!’– ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய பாதுகாப்புப்படை

தீவிரவாதிகள்
தீவிரவாதிகள்

காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் மூளையாகச் செயல்பட்ட 14 பயங்கரவாதிகளை கடந்த 2 ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் என்கவுன்டர் செய்துள்ளனர்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ரியாஸ் நைக்கு பாதுகாப்புப் படையினரால் காஷ்மீரில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். 8 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினரின் வலையில் சிக்காமல் தப்பி வந்த ரியாஸ் புல்வாமா பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் பகுதியில் கடந்த சில வருடங்களாக நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் மூளையாகச் செயல்பட்ட 14 பயங்கரவாதிகளை கடந்த 2 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் செய்துள்ளனர்.

ரியாஸ் நைக்கு
ரியாஸ் நைக்கு

மார்ச் 15-ம் தேதி 2020-ம் ஆண்டு தெற்கு காஷ்மீரில் நடந்த தாக்குதலின் போது லக்‌ஷ்ர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முஸாஃபர் அஹமது பட் சுட்டுக்கொல்லப்பட்டார். கமாண்டராகச் செயல்பட்டு வந்த முஸாஃபருடன் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலின் போது ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான யாஷிர் மூன்று பயங்கரவாதிகளுடன் சேர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

`மோஸ்ட் வான்டட்; கணித ஆசிரியர்; சோஷியல் மீடியா கில்லி!’ - காஷ்மீரில் கொல்லப்பட்ட ஹிஸ்புல் தலைவர்

ஜனவரி 23-ம் தேதி புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் யாஷிர் நண்பர் என அறியப்பட்ட அபு சயிஃபுல்லா என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஜாகீர் முஸா இந்திய அல்கொய்தா பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்தவர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர் இந்த ஜாகீர் முஸா எனக் கூறப்படுகிறது. இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்புகளில் இணைத்துப் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளார். 2019-ம் ஆண்டு மே மாதம் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினரால் ஜாகீர் முஸா கொல்லப்பட்டார்.

பயங்கரவாதிகள்
பயங்கரவாதிகள்

ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பின் கமாண்டராக இருந்த ஃபயஸ் பன்சூ பாதுகாப்புப் படையினரால் 2019-ம் ஆண்டு என்கவுன்டர் செய்யப்பட்டார். ஹமீத் காஷ்மீரில் செயல்பட்டு வந்த அல்கொய்தா அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வந்தவர். அவந்திப்புரா பகுதியில் நடந்த தாக்குதலில் அக்டோபர் 22, 2019-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

ஒசாமா ஹிஜ்புல் முஜாஹீதின் கமாண்டராகச் செயல்பட்டு வந்தவர். மூத்த பா.ஜ.க நிர்வாகியை படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஓசாமா ரம்பன் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகளுடன் 2019 செப்டம்பரில் கொல்லப்பட்டார்.

ஆசிஃப் மக்பூல் பாத் லக்‌ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆசிஃப் பழவியாபாரி குடும்பத்தினர் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். 2019-ம் ஆண்டு ஆசிஃப் நடவடிக்கையைக் கண்காணித்த பாதுகாப்புப்படை என்கவுன்டர் செய்தது. முன்னா லகோரி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ- முகமது டாப் கமாண்டர். 2019-ல் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

 புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட அஹமது கான் மார்ச் 10, 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர்கள் அனைவரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் நிழல்போல் கண்காணித்து அவர்களின் சதித்திட்டங்களை முறியடித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு