Published:Updated:

`தனிமைப்படுத்தும் அறைகளாகும் ரயில் பெட்டிகள்!’- கொரோனாவை எதிர்கொள்ள தயாராகும் ரயில்வே

சுத்தம் செய்யப்படும் ரயில்
சுத்தம் செய்யப்படும் ரயில்

இரயில் பெட்டிகளை கொரோனா தனிமைப்படுத்துதலுக்கான அறைகளாக மாற்ற முயற்சிகள் எடுக்குமாறு இரயில்வே அமைச்சகம் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், வைரஸ் பரவல் மத்திய, மாநில அரசுகள் கணித்த விகிதத்தை விட அதிகரித்தால், மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். மருத்துவ வசதிக்கு அடிப்படைத் தேவையான படுக்கை வசதிகள் இந்தியாவைப் பொறுத்த வரையில், 1000 பேருக்கு 0.7 என்ற விகிதத்திலேயே இருப்பதாக சில புள்ளிவிவரங்கள் சொல்லுகிறது. ஆனால், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் படி, 1,000 பேருக்கு குறைந்தது 3 படுக்கைகளாவது இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் பெட்டி
ரயில் பெட்டி

இந்நிலையில், எதிர்வரும் வாரங்களில் கொரோனா பாதிப்பால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டால், அவர்களின் சிகிச்சைக்காக மருத்துவப் படுக்கைகளை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், அனைத்து மண்டலங்களின் மேலாளர்களுடன் வீடியோ கான்ஃபிரன்சிங்கில் உரையாடியப் பின், ரயில் பெட்டிகளை, தனிமைப்படுத்தப்படும் அறைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் அமைச்சர்கள் விவாதித்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், இந்தியாவில் இயக்கப்படும் 13,523 பயணிகள் ரயில்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில் பெட்டிகளை கொரோனா தனிமைப்படுத்துதலுக்கான அறைகளாக மாற்ற முயற்சிகள் எடுக்குமாறு இரயில்வே அமைச்சகம் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தும் அறை அமைப்பது குறித்து சில வழிகாட்டுதல்களையும், நிபந்தனைகளையும் விளக்கும் விதமாக தென்னக ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை தென்னக ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையின் படி, அனைத்து மண்டலங்களும் தனிமைப்படுத்துதல் அறையை மத்திய அரசு வழிகாட்டியுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியற்ற இரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் அறைகளாக மாற்றப்பட உள்ளன.

`தனிமைப்படுத்தும் அறைகளாகும் ரயில் பெட்டிகள்!’- கொரோனாவை எதிர்கொள்ள தயாராகும் ரயில்வே

ஒரு கேபினுக்கு ஒருவர் என்ற வீதம் அதற்கு ஏற்றார் போல அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, முதன்மை கதவுக்கு அடுத்துள்ள அனைத்து தடுப்புகளையும் நீக்குதல், பெட்டியினுள் அமைந்திருக்கக் கூடிய கழிவறைகளில் ஒன்றினை குளியலறையாக மாற்றுதல், கை கழுவுவதற்கான வசதிகளை முறையாக ஏற்படுத்துதல், பெட்டியினும் உள்ள அனைத்து மைய படுக்கைகளையும் நீக்குதல், படுக்கைகளில் ஏறுவதற்காக பயன்படுத்தப்படும் ஏணிகளை நீக்குதல், தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கான தாங்கிகளை அதிகரித்து, மருத்துவ உபகரணங்களை வைக்கும் அமைப்பாக அவற்றை மாற்றுதல், 230 வோல்ட் அளவுள்ள மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வதோடு, லேப்டாப், மொபைல்களை சார்ஜ் செய்வதற்கான வசதிகளை முறையாக ஏற்படுத்தி தருதல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்துதல் அறை அமைக்கப்பட உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு