Published:Updated:

`முடக்கப்படும் பயணிகள் ரயில் சேவை!’ - மார்ச் 31 வரை 12,000-த்துக்கும் அதிகமான ரயில்கள் ரத்து

நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரயில்கள்
நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரயில்கள்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 31-ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரியாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக மக்கள் தாமாகவே முன்வந்து சுய ஊரடங்கை இன்று (22.3.2019) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைப்பிடிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று தேசிய அளவில் பெரும்பான்மையான மக்கள், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறவில்லை. பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. ரயில் சேவையும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இன்று மட்டும் 3,500 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

ரயில்கள்
ரயில்கள்

இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் வரும் 31-ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று மாலை முதலே தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இன்று காலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் சுமார் 12,500 ரயில் சேவைகள், வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அத்தியாவசியத் தேவைகளுக்காக சரக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் சுமார் 500 என்ற குறைந்த அளவில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-ஐக் கடந்துள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் பயணித்த 14 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்தே முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். #janatacurtfew-வை முன்னிட்டு வடமாநில நகரங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ரயில்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ரயில்நிலையங்களில் நேற்று மாலை முதலே குவியத் தொடங்கினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

இது வைரஸ் பரவலை அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டது. இதுகுறித்து இந்தியில் ட்வீட்டிய பிரதமர் மோடி, ``கொரோனா அச்சத்தால், பெரும்பாலான சகோதரர்கள் தாங்கள் வேலை செய்துவரும் நகரங்களைவிட்டு வெளியேறி சொந்த ஊர்களுக்குச் செல்ல முயல்கிறார்கள். கூட்டமாகப் பயணிப்பது வைரஸ் பரவலை அதிகரிக்கும். மேலும், இது உங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது உங்கள் சொந்த ஊரில் வசிக்கும் மக்களுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதனால், நீங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே மேலும் சில நாள்களுக்குத் தங்கியிருக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மோடி
மோடி

இதன்மூலம் வைரஸ் பரவலை நம்மால் கட்டுக்குள் கொண்டுவர முடியும். கூட்டமான ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்வதன் மூலம் நம்முடைய உடல்நலனோடு நாம் விளையாடிக்கொண்டிருக்கிறோம். தயவுசெய்து உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் சிந்தியுங்கள். அவசரம் ஏற்பட்டால் தவிர உங்கள் வீடுகளுக்குச் செல்வதைத் தவிருங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு