Published:Updated:

`எப்போதாவது லாட்டரி சீட்டு வாங்குவேன்!' - ரூ.12 கோடி கிறிஸ்துமஸ் பம்பர் பரிசு வென்ற கேரளப் பழங்குடி

ரூ.12 கோடி வென்ற பழங்குடியின மனிதர்!
ரூ.12 கோடி வென்ற பழங்குடியின மனிதர்! ( Kerala Kaumudi )

கேரள லாட்டரியின் கிறிஸ்துமஸ் பம்பர் பரிசுத் தொகை ரூ.12 கோடியைப் பழங்குடியின மனிதர் வென்றுள்ளார்.

கேரளாவில் கிறிஸ்துமஸ் பம்பர் பரிசு லாட்டரி வாங்கிய பழங்குடியின மனிதருக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், வருமான வரியாக 30 சதவிகிதம் 10 சதவிகித ஏஜன்ட் கமிஷன் பிடித்தம் போக மீதித் தொகை அவருக்கு வழங்கப்படும். ST 269609 என்பதுதான் அந்த அதிர்ஷ்ட லாட்டரியின் எண். கண்ணூர் மாவட்டத்தில் கூத்துபரம்பா என்ற கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பழங்குடியின மனிதரின் பெயர் ராஜன். ஏழ்மையான நிலையில், கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிரா, விஜில், அக்ஷரா என 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது, ராஜன் அந்த டிக்கெட்டை வங்கியில் டெபாஸிட் செய்துள்ளார்.

பரிசுப் பணம்
பரிசுப் பணம்
மாதிரி படம்

`எப்போதாவது லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கம் தனக்கு இருந்ததாகவும் தொடர்ச்சியாக சீட்டுகளை வாங்க மாட்டேன்' என்று ராஜன் தெரிவித்துள்ளார். கேரள லாட்டரியில் ஏழைகள் வாங்கும் டிக்கெட்டுக்க்குப் பரிசுகள் விழுவது அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு, ஆழப்புழாவைச் சேர்ந்த மீனவ இளைஞர் அந்து, ராணுவத்தில் சேர முயன்று தோல்வியடைந்த வேதனையில் இருந்தார். அப்போது, கேரள அரசின் ஸ்ரீசக்தி லாட்டரிச் சீட்டு வாங்கியுள்ளார். இந்தச் சீட்டுதான் வாழ்க்கையில் அந்த இளைஞர் வாங்கிய முதல் லாட்டரிச் சீட்டு ஆகும். அந்த இளைஞருக்கு முதல் பரிசு விழுந்து, ரூ.70 லட்சத்தைத் தட்டிச் சென்றார்.

டெல்லி தேர்தல் முடிவுகள்... தமிழக அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?

ஆழப்புழா மாவட்டம் செட்டிக்குளக்காரா கிராமத்தில் மற்றொரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. சிவன் என்பவர் வீட்டுக்கு ஒருவர் லாட்டரி விற்பனை செய்ய வந்துள்ளார். தனக்கு இதய நோய் இருப்பதாகக் கூறி லாட்டரிச் சீட்டு வாங்கிக் கொள்ளும்படி சிவனைக் கேட்டுள்ளார்.

லாட்டரி
லாட்டரி

சிவன் நம்பிக்கையில்லாமல் லாட்டரியை வாங்க மறுத்துள்ளார். அருகிலிருந்த, சிவனின் மனைவி ஒமனா லாட்டரிச் சீட்டை வாங்குமாறு கணவரைக் கேட்டுக்கொண்டுள்ளார். மனைவி சொல்லை மீற முடியுமா?.'சரி... ஒன்றை வாங்கிப் பார்ப்போம்!' என்ற எண்ணத்தில் சிவன், லாட்டரிச் சீட்டை வாங்கினார். அந்த சீட்டுக்கு ரூ.70 லட்சம் முதல் பரிசாக விழுந்தது. சிவன் கட்டடத் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு