மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் பேருந்தில் பயணித்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி ஓட்டுநர், நடத்துநர் உள்பட மூவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தை அடுத்த மனவார் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம்பெண், கடந்த வெள்ளிக்கிழமை அன்று குக்ஷி நிறுத்தத்தில் இருந்து மனவார் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். இரவு நேரம் என்பதால் பேருந்தில் குறைந்த அளவிலான பயணிகளே பயணித்துள்ளனர்.

பேருந்து, தனக்குரிய நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பதற்றத்தில் அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பேருந்தில் பயணித்த சிலரும் நடத்துநரிடம், ஏன் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு நடத்துநரும் ஓட்டுநரும், அந்தப் பெண்ணை காந்த்வானி பகுதியில் இறக்கி விடுவதாகத் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிறுத்தங்களில் பயணிகள் அனைவரும் இறங்கிவிட, பழங்குடியினப் பெண் மட்டும் தனியாகப் பயணித்துள்ளார்.
அப்போது குலாட்டி - பலிபூர் சாலையின் ஒதுக்குப்புறத்திற்கு திடீரென பேருந்தின் வழிதடத்தை ஓட்டுநர் திசைதிருப்பி உள்ளார். பேருந்தை ஓட்டுநர் ஓரம் கட்டிய நிலையில், நடத்துநர் அப்பெண்ணை பேருந்தினுள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நடத்துநரை அடுத்து, ஓட்டுநரும், க்ளீனரும் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது, அந்த வழியாக சென்ற சிலர், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்திற்குள் சென்றுள்ளனர். அப்போது, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரை பிடித்துள்ளனர். மற்ற இருவரும் தப்பியோடிய நிலையில், சம்பவம் தொடர்பாக மனவார் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார்.
புகார் பெறப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் பிடிபட்ட ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய நடத்துநரையும், கிளீரனையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை IPC 376, 376 (D), 376(K) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டெண்டென்ட் ஆதித்ய பிரதாப் சிங், மருத்துவப் பரிசோதனை முடிந்துள்ளதாகவும், அந்தப் பெண் நலமாக உள்ளதாகவும், அவரின் உறவினருடன் அவரை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, தனியார் பேருந்தில் பழங்குடியின இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.