Published:Updated:

`சகோதரிகளின் காலில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற ஆளும்கட்சியினர்!'- அதிர்ச்சி தரும் மே.வங்க வீடியோ

மேற்குவங்க சகோதரிகள்
மேற்குவங்க சகோதரிகள்

மேற்குவங்கம் மாநிலத்தில் 2 பெண்களின் கால்களைக் கட்டி சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் தினாஞ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்மிரிகோனா தாஸ் மற்றும் சோமா தாஸ் என்ற சகோதரிகள். இவர்களுக்கும் அந்தப் பகுதியின் ஆளும்கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அவர் தன் ஆட்களுடன் இணைந்து இரு பெண்களையும் அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

தாக்குதல்
தாக்குதல்

சகோதரிகளின் வாதம்!

ஸ்மிரிகோனா தாஸ் மற்றும் சோமா தாஸ் ஆகிய இருவரும் 30 வயதுக்குட்பட்ட சகோதரிகள். இவர்களின் வீட்டுக்கு அருகில் புதிதாகச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அதற்காக அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் சிறிய அளவிலான நிலம் கோரப்பட்டுள்ளது. தங்கள் ஊர் நலனுக்காக அனைவரும் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேபோன்று ஸ்மிரிகோனா தாஸும் பஞ்சாயத்துத் தலைவரின் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

`கைகள் இல்லாமல் விமானம் ஓட்டும் பெண்'- வைரல் வீடியோ பின்னணி இதுதான்!

முதலில் 12 அடி அகலம் சாலை அமைக்கப்படும் எனக் கூறி நிலம் வாங்கியுள்ளனர். பிறகு 24 அடி அகலத்துக்குப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதை அறிந்த ஸ்மிரிகோனா தாஸ், அதிகப்படியான தங்கள் நிலம் அபகரிக்கப்படுவதைக் கண்டு பஞ்சாயத்துத் தலைவர் அமல் சர்காரிடம் முறையிட்டுள்ளார். இருந்தும் அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்காத பஞ்சாயத்துத் தலைவர் அதிகாரிகளுடன் வந்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதைத் தட்டிக்கேட்டு மேற்கொண்டு பணிகள் செய்யவிடாமல் தடுத்துள்ளார் ஸ்மிரிகோனா தாஸ். அப்போது பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவருடன் சேர்ந்த சில ஆண்கள் அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி, அவரது காலில் கயிறு கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

மேற்குவங்க சகோதரிகள்
மேற்குவங்க சகோதரிகள்

தன் சகோதரிக்கு நடக்கும் அநியாயத்தை எதிர்த்துக் கேள்வி கேட்ட சோமா தாஸையும் அடித்து அவரது காலிலும் கயிறு கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். இரு பெண்களும் துன்புறுத்தப்படும் காட்சிகள் வீடியோவாக சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, அம்மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அர்பிதா கோஷ், பஞ்சாயத்துத் தலைவர் அமல் சர்காரை கட்சியிலிருந்து தற்காலிக இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படுகாயமடைந்த இரண்டு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ஸ்மிரிகோனா தாஸ், நேராகக் காவல்நிலையம் சென்று பஞ்சாயத்துத் தலைவர் அமல் சர்கார் மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. இருந்தும் இதுவரை எந்தக் கைது சம்பவமும் நடக்கவில்லை. கடந்த இரு நாள்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்ததாகவும் நேற்று ஸ்மிரிகோனா தாஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்து வீடியோ வெளியான பிறகே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இளைய சகோதரியான ஸ்மிரிகோனா தாஸ் தன் பகுதியில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த இரு சகோதரிகளும் தன் தாயுடன் வசித்து வருகின்றனர். தன் மகள்களைத் தாக்கியவர்களைத் தடுக்கச் சென்ற தாய்க்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு