Published:Updated:

கேரளா: `ஏ.கே.ஜி சென்டரின் எல்.கே.ஜி மாணவி' - விமர்சனங்களுக்கு இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் பதில்

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்
திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்

'நான் இந்த வயதில் மேயர் ஆகியிருக்கிறேன் என்றால், அதன்படி செயல்படவும் தெரியும். பக்குவத்தை அளப்பதற்கு இங்கு யாரும் வர வேண்டாம்' என வெடித்திருக்கிறார் மேயர் ஆர்யா ராஜேந்திரன்.

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக, 22 வயதான ஆர்யா ராஜேந்திரன் கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். ஒரு எலெக்ட்ரீசியனின் மகளான ஆர்யா ராஜேந்திரன், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் சி.பி.எம் சார்பில் கவுன்சிலராகப் போட்டியிட்டு, இப்போது மாநகராட்சி மேயராக இருக்கிறார். அவர் மேயராகப் பொறுப்பேற்ற சமயத்தில் நாடுமுழுவதுமுள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்தினார்கள். இந்தநிலையில், கரமன வார்டின் பா.ஜ.க கவுன்சிலர் அஜித், தனது முகநூல் பக்கத்தில் ஏற்கெனவே ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், "மாநகராட்சியிலுள்ள ஹிட்டாச் இயந்திரங்களைக் காணவில்லை. மாநகராட்சிக்கு இரண்டு ஹிட்டாச் இயந்திரங்கள் உண்டு. 70 லட்சம் ரூபாய் செலவில் இந்த இரண்டு ஹிட்டாச் இயந்திரங்களும் வாங்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக அந்த இரண்டு இயந்திரங்களையும் காணவில்லை. இது பற்றி மாநகராட்சியில் விசாரித்தால், ஓர் இடத்தில்கூட திருப்திகரமான பதில் வரவில்லை. யாரிடம் கேட்டாலும் அது அங்கு இருக்கலாம், இங்கு இருக்கலாம் அல்லது எங்காவது இருக்கலாம் எனப் பொறுப்பில்லாமல் பதில் கூறுகிறார்கள்.

ஆர்யா ராஜேந்திரன்
ஆர்யா ராஜேந்திரன்

எனவே, நாமே விசாரித்துக் கண்டுபிடிக்கலாம் என இறங்கினேன். ஏனென்றால் ஏ.கே.ஜி சென்டரின் (சி.பி.எம் தலைமை அலுவலகம்) எல்.கே.ஜி குழந்தை மேயர் இருக்கையில் அமர்ந்து விளையாடி, இல்லாமல் ஆக்குவதற்கு அல்ல மக்களின் வரியில் வரும் லட்சக்கணக்கான பணம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலையின்போது குப்பைகளை அகற்றியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் சம்பந்தமாக விவாதிக்க திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. கொரோனா காலத்தில் குறைவான அளவில் பொங்காலை நடந்த நிலையில், அந்தக் குப்பைகளை அகற்ற 21 டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டதாக மாநகராட்சி சார்பில் கூறப்படுகிறது. எனவே, இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் காங்கிரஸ் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

மேயர் ஆர்யா ராஜேந்திரன்
மேயர் ஆர்யா ராஜேந்திரன்

இந்தக் கூட்டத்திலும் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு அனுபவம் இல்லை என்பது போன்ற கருத்துகள் எழுந்தன. இதனால் கோபமான மேயர் ஆர்யா ரஜேந்திரன், கவுன்சிலர்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக வெடித்துக் கிளம்பினர். அவர் பேசும்போது, "இந்தச் சமூகத்திலுள்ள சிலருக்குத் தவறான எண்ணங்கள் உண்டு. நாங்கள் ஓட்டைப் பிரித்துவிட்டு குதித்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. நான் இந்த வயதில் மேயர் ஆகியிருக்கிறேன் என்றால் அதன்படி செயல்படவும் தெரியும். பக்குவத்தை அளப்பதற்கு இங்கு யாரும் வர வேண்டாம்" என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு