Published:Updated:

`சீனாவுடனான எல்லைப் பிரச்னை... அமெரிக்க போராட்டங்கள்!’ -முக்கியத்துவம் பெற்ற மோடி - ட்ரம்ப் உரையாடல்

மோடி-ட்ரம்ப்
மோடி-ட்ரம்ப்

கொரோனா தொடர்பாகவும் உலக சுகாதார நிறுவனத்தில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாகவும், ட்ரம்ப் மோடியுடன் விவாதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேற்று இரவு இந்தியப் பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசியுள்ளார். சீனா விவகாரம், கொரோனா, அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் எனப் பல விஷயங்கள் இந்த உரையாடலின்போது விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய எல்லையில் சீனா படைகளைக் குவித்துவரும் நிலையில், ட்ரம்ப், மோடி உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

முன்னதாக, இந்திய - சீன எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த விவகாரத்தில் தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். கடந்த வாரம், `சீனா விவகாரம் தொடர்பாக மோடியிடம் பேசினேன். அவர் இந்த விவகாரத்தில் நல்ல மூடில் இல்லை’ எனத் தெரிவித்தார். மத்தியஸ்தம் கோரிக்கையை மறுத்த இந்தியா, சமீபத்தில் அப்படியான உரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை என்றது. சீனாவும், அமெரிக்காவின் தலையீட்டை வெளிப்படையாகவே மறுத்தது.

இந்த நிலையில்தான், ட்ரம்ப் நேற்று இந்தியப் பிரதமர் மோடியை அழைத்துப் பேசியுள்ளார். அப்போது அவர், அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``நண்பர், அதிபர் ட்ரம்ப்புடன் பேசினேன். ஜி-7 மாநாடு குறித்தும், கொரோனா பெருந்தொற்று தொடர்பாகவும் மற்ற பல விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினோம். கொரோனாவுக்குப் பிறகான கட்டமைப்பில் இந்திய - அமெரிக்க உறவு ஆழமானதாகவும் செழுமையானதாகவும் இருக்கும்” என்றார்.

ட்ரம்ப் உடனான உரையாடலை பிரதமர் மோடியே உறுதி செய்திருக்கும் நிலையில், அதில் குறிப்பிட்டுள்ள `மற்ற பல விவகாரங்கள்’ என்னும் தகவல் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காரணம், சுமார் 25 நிமிடங்கள் நீடித்த உரையாடலில், சீனா எல்லையில் படைகளைக் குவித்துவருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அதைத்தான் மோடி சீனாவுக்கு சொல்ல வருகிறார் என்கிறார்கள்.

ட்ரம்ப், மோடி உரையாடலில் இந்திய - சீன விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய அரசின் அறிக்கையும் தெரிவிக்கிறது. எனினும் அந்த விவகாரத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை. கடந்த திங்கள்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை, `இந்தியாவுடனான எல்லை சிக்கலை முடிவுக்குக் கொண்டு வர சீனா விதிகளை மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும்’ என கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மோடி - ஜி ஜின்பிங்
மோடி - ஜி ஜின்பிங்

இந்த உரையாடலின்போது ட்ரம்ப், மோடியை ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். உறுப்பு நாடுகள் இல்லாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என ட்ரம்ப் விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, கொரோனா தொடர்பாகவும் உலக சுகாதார நிறுவனத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் ட்ரம்ப் மோடியுடன் விவாதித்துள்ளார். பிரதமர் மோடி, அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்கள் குறித்தும் பேசியுள்ளார். விரைவாக பிரச்னைகள் முடிவுக்கு வரும் என அவர் நம்பிக்கையும் வாழ்த்தும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

மோடி, ட்ரம்ப்பின் 25 நிமிட தொலைபேசி உரையாடலில், கொரோனா, ஜி7, அமெரிக்கப் போரட்டங்கள், இந்திய-சீன விவகாரம், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டுள்ளது, உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு