Published:Updated:

‘அனைத்து ஊழியர்களும் நல்லா இருக்கணும்’- தற்கொலைக்கு முயன்ற தெலங்கானா போக்குவரத்து ஊழியர்!

தெலங்கானாவில் வேலை நிறுத்தப் போராட்டம் செய்த ஊழியர்கள் பணியிழந்ததால், ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஸ்ரீனிவாஸ் ரெட்டி
ஸ்ரீனிவாஸ் ரெட்டி

தெலங்கானா சாலை போக்குவரத்துக் கழகத்தை (TSRTC) முழுமையாக அரசுடன் இணைப்பது, பல்வேறு காலி பணியிடங்களுக்குப் போதுமாக ஆட்களை நியமிப்பது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்குவது, 2017 ஊதிய சீரமைப்புப் பரிந்துரைகளை அமல் படுத்துவது மற்றும் டீசல் மீதான வரியை அகற்றுவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 10 நாள்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

தெலங்கானா போராட்டம்
தெலங்கானா போராட்டம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என தெலங்கானா ஆளும் அரசு உத்தரவிட்டது. ஆனால், அரசின் உத்தரவை ஏற்று 200 பேர் மட்டுமே தங்கள் வேலைகளுக்குத் திரும்பியுள்ளனர். வேலைக்கு வராத சுமார் 48,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தெலங்கானா போக்குவரத்துப் பிரச்னை அந்த மாநிலம் மட்டுமில்லாது, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தற்காலிகப் பணியாளர்களை வைத்து 50 சதவிகிதம் மட்டுமே போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளதால், பயணிகளும் பொதுமக்களும் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

“விடுமுறை நாள்களில் இதுபோன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பெரிய குற்றம். போக்குவரத்துத் துறை கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும்போது, இந்த வேலை நிறுத்தத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பணிக்கு வராத அனைவரும் வேலை இழந்ததாகக் கருதப்படுவர். என்ன நடந்தாலும் தன் முடிவிலிருந்து திரும்பப் பெறப்போவதில்லை” என சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இதனால் ஊழியர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி என்ற போக்குவரத்து ஊழியர், தீ குளித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் இவரை உடனடியாகக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 90% தீ காயங்களுடன் ஸ்ரீனிவாஸ் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீனிவாஸ் ரெட்டி
ஸ்ரீனிவாஸ் ரெட்டி

வேலையிழப்பு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக ஸ்ரீனிவாஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி, தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலில் உள்ள தீ காயங்களுடன் அந்த வீடியோவில், “ 40 வருடங்களாக சிறப்பாகப் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் நன்மை பெறவேண்டும். என் குடும்பத்திடம் இதைச் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீனிவாஸ், கடந்த 20 வருடங்களாக தெலங்கானா போக்குவரத்துத் துறையில் வேலை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.