Published:Updated:

வேலைநிறுத்தம் செய்த போக்குவரத்து ஊழியர்கள்! - கூண்டோடு டிஸ்மிஸ் செய்த தெலங்கானா முதல்வர்

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈட்டுபட்டுள்ளதால் அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா வேலை நிறுத்தம்
தெலங்கானா வேலை நிறுத்தம் ( Twitter )

தெலங்கானா சாலை போக்குவரத்துக் கழகத்தை (TSRTC) முழுமையாக அரசுடன் இணைப்பது, பல்வேறு காலி பணியிடங்களுக்கு போதுமாக ஆட்களை நியமிப்பது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்குவது, 2017 ஊதிய சீரமைப்பு பரிந்துரைகளை அமல் படுத்துவது மற்றும் டீசல் மீதான வரியை அகற்றுவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Telangana bus strike
Telangana bus strike
Twitter

மூன்றாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற தொடர் விடுமுறை நாள்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். தனியார் ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பேருந்துகளின் உதவியுடன் 50% போக்குவரத்தைச் சரி செய்துள்ளது அம்மாநில அரசு. இதற்கிடையே நேற்று, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவில்லை எனில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிகை விடுத்தது.

Vikatan

ஆனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 50,000 ஊழியர்களில் வெறும் 200 பேர் மட்டுமே பணிக்குத் திரும்பினர். இதையடுத்து அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் புவ்வாட அஜய்குமார் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில், ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப்பெற மறுத்துவிட்டனர்.

Telangana bus strike
Telangana bus strike
ANI

இந்நிலையில் தெலங்கானாவின் முதன்மையான பிரச்னையாக மாறியுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி போக்குவரத்து உயர் அதிகாரிகளுடன் நேற்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் பேசிய அவர்,``தொடர் விடுமுறை நாள்களில் இதுபோன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பெரிய குற்றம். போக்குவரத்துத் துறை கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும்போது இந்த வேலை நிறுத்தத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

Vikatan

அரசின் எச்சரிக்கைக்குப் பின்னரும் பணிக்குத் திரும்பாத ஊழியர்கள் வேலை இழந்ததாகவே கருதப்படுவர். அவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டப்படாது. மேலும், போக்குவரத்துத் துறையை முழுமையான அரசுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா போக்குவரத்துத் துறைக்கு விரைவில் புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் எந்த சங்கத்திலும் சேரமாட்டோம் என உறுதியளித்த பின்னரே பணியில் நியமிக்கப்படுவார்கள்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Chandrashekar Rao
Chandrashekar Rao

``தெலங்கானா போக்குவரத்தில் நிரந்தர மாற்றுக் கொள்கையை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது அதன்படி மூன்று முயற்சிகள் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. 3,000 முதல் 4,000 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, இளைஞர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு அவர்களுக்கு உரியப் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளன. ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் உயர்நிலை ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு போக்குவரத்து கொள்கை உறுதி செய்யப்படும்” என தெலங்கானா போக்குவரத்துத் துறை அமைச்சர் புவ்வாட அஜய்குமார் கூறியுள்ளார். மாநில அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 3 நாள்களாக தெலங்கானாவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.