Published:Updated:

`கொரோனாவிலிருந்து தப்பிக்க கோமியம்!' - கொல்கத்தாவில் பா.ஜ.க பிரமுகர் கைது

கோமியம்
கோமியம் ( Representational Image )

`மாட்டு மூத்திரம் என்று கூறிதான் நாராயண் சட்டர்ஜி எல்லோருக்கும் குடிக்கக் கொடுத்துள்ளார். யாரையும் ஏமாற்றியோ கட்டாயப்படுத்தியோ அவர் குடிக்க வைக்கவில்லை.'

கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொல்கத்தாவில், பசுவின் கோமியத்தைக் குடிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை கொல்கத்தாவில் ஜோராசாக்கோ பகுதியில், நாராயண் சட்டர்ஜி கோமியம் குடிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

corona
corona

கொரோனா பயத்தில் இருந்த மக்கள் கோமியத்தைக் குடித்துள்ளனர். குடித்தவர்களில் இருவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்ததால், நாராயண் சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். `கோமியத்தை அற்புதமான பிரசாதம்' என்று கூறி நாராயண் சட்டர்ஜி மற்றவர்களைக் குடிக்க வைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாராயண் சட்டர்ஜி கைது செய்யப்பட்டதற்கு, பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலர் சயந்தன் பாசு கூறுகையில், ``கோமியம் என்று கூறிதான் நாராயண் சட்டர்ஜி எல்லோருக்கும் குடிக்கக் கொடுத்துள்ளார். யாரையும் ஏமாற்றியோ அல்லது கட்டாயப்படுத்தியோ அவர் குடிக்க வைக்கவில்லை. யாரும் பாதிக்கப்பட்டார்களா என்பது கூடத் தெரியவில்லை. எந்தக் காரணமும் இல்லாமல் ஜனாநாயகத்துக்கு விரோதமாக , அவரைக் கைது செய்து போலீஸ் சிறையில் அடைத்துள்ளது'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மாட்டு மூத்திரத்தைக் குடிப்பதால் உடலுக்கு நல்லது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை
லாக்கெட் சட்டர்ஜி, பா.ஜ.க எம்.பி

மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ், `கோமியத்தைக் குடிப்பதால் எந்தத் தீங்கும் ஏற்படாது. நான் பல முறை குடித்து வந்துள்ளேன். இனியும் குடிப்பேன் ' என்று கொந்தளித்துள்ளார். அதேவேளையில் , கோமியத்தைக் குடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி லாக்கெட் சட்டர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். `கோமியத்தைக் குடிப்பதால் உடலுக்கு நல்லது விளையும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை' என்று அவர் கண்டித்துள்ளார்.

கோமியத்தை மற்றவர்களுக்கு வழங்கியதற்காக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு