Published:Updated:

ஃபேஸ்புக் மூலம் காதல் - தன்பால் ஈர்ப்பாளர்களான இரண்டு ஆண்களுக்குக் கொல்கத்தாவில் பிரமாண்ட திருமணம்!

தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமண ஜோடி ( instagram.com/abhishekraycreations/ )

இரண்டு ஆண் நண்பர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் கொல்கத்தாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஃபேஸ்புக் மூலம் காதல் - தன்பால் ஈர்ப்பாளர்களான இரண்டு ஆண்களுக்குக் கொல்கத்தாவில் பிரமாண்ட திருமணம்!

இரண்டு ஆண் நண்பர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் கொல்கத்தாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

Published:Updated:
தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமண ஜோடி ( instagram.com/abhishekraycreations/ )

இந்தியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்டால் சட்டம் அங்கீகரிப்பதில்லை. ஆனால் அத்திருமணம் குற்றமாகக் கருதப்படுவதில்லை. இந்தியா முழுக்க ஆங்காங்கே ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன.

கொல்கத்தாவைச் சேர்ந்த அபிஷேக் ரே என்பவருக்கு சைதன்யா சர்மா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாகப் பழகினர். பின்னர் அவர்களுக்குள் காதல் வந்தது. இருவரும் பிரிந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.

மணமக்கள்
மணமக்கள்
instagram.com/abhishekraycreations/

பேஷன் டிசைனரான அபிஷேக் மற்றும் சைதன்யா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் கோவாவில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இருவரும் எளிய முறையிலேயே திருமணம் செய்யத் திட்டமிட்டனர். ஆனால் இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் இருவரும் சேர்ந்து தங்களின் திருமணத்தைப் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கின்றனர்.

இவர்களின் திருமணம் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்தில் வழக்கமாக நடக்கும் அனைத்து சடங்குகளும் புரோகிதர் மூலம் நடத்தப்பட்டன. அதோடு அக்னி முன்பு அவர்கள் திருமண உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். திருமணம் இந்து முறைப்படி பெங்காலி மற்றும் மார்வாரி முறையில் நடந்தது. இத்திருமணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமண ஜோடி
தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமண ஜோடி
instagram.com/abhishekraycreations/

இது குறித்து அபிஷேக் கூறுகையில், "நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது நமது திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மறக்க முடியாததாக இருக்கவேண்டும் என்று சைத்ன்யாவிடம் தெரிவித்தேன். இது போன்ற நிகழ்வுகளை எளிய முறையில் வீட்டிலேயே செய்து கொள்வர். ஆனால் நாங்கள் அதிலிருந்து வித்தியாசமாக இருக்க விரும்பினோம்" என்று தெரிவித்தார்.

திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. திருமணம் நடைபெறும் ஹாலுக்கு வெளியில் பேனர்களையும் வைத்திருந்தனர். திருமணத்திற்காக அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன. அபிஷேக்கும், சைதன்யாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகிப் பழகி இருக்கின்றனர். இருவரும் ஆக்ரா சென்ற போது தாஜ்மகால் முன்பு சைதன்யா தனது காதலை அபிஷேக்கிடம் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்த இந்தத் தன்பால் ஈர்ப்பாளர்கள் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.