Published:Updated:

`என் தம்பி கலகக்காரன் இல்ல!’- வன்முறை சம்பவத்தால் கலங்கும் லக்னோ மாணவர்களின் குடும்பத்தினர்

மருத்துவச் செலவுகளுக்குப் பணமில்லாமல் தவிப்பதால் அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம்
போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக லக்னோவில் டிசம்பர் 15-ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. லக்னோ கலவரத்தில் குண்டுத் தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டு முகமது ஜிலானி மற்றும் முகமது சாஹீம் என்ற இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

போராட்டத்துக்கு எல்லாம் செல்லவில்லை சாலையில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மாணவர்களின் குடும்பத்தினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மருத்துவச் செலவுகளுக்குப் பணமில்லாமல் தவிப்பதால் அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம்
போராட்டம்

`போராட்டம் நடத்துறாங்கன்னு எல்லாம் எனக்கு தெரியாது. அத்தை வீட்டுக்கு ரிக்‌ஷாவுல போய்கிட்டு இருந்தேன். நிறைய பேர் கூட்டமா இருந்தாங்க. ரிக்‌ஷாக்காரர் வண்டியவிட்டு இறங்கி ஓடிடுன்னு சொன்னார். அங்க இருந்தவங்க எல்லாம் கல் தூக்கி எறிஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

நான் ஒரு தெருவுக்குள் ஒளியப்போனேன். என் உடம்புல எதோ காயம் ஏற்பட்டது மாதிரி இருந்தது. எனக்கு மயக்கம் ஏற்பட்டது. கண்ணு திறந்து பார்த்தா நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்’ என மாணவர் முகமது ஜிலானி கூறியுள்ளார்.

ஜிலானியின் தந்தை முகமது நயீம் பேசுகையில், ``நான் மினி லாரி டிரைவரா இருக்கேன். என் கையில இருக்க காசு எல்லாத்தையும் செலவு செஞ்சுட்டேன். இதுவரைக்கும் 30 ஆயிரத்துக்கு மேல செலவு செஞ்சுட்டேன். இதுக்கு மேல என்கிட்ட காசு இல்ல. காவல்நிலையத்திலிருந்து சில காவலர்கள் வந்து என் மகனிடம் விசாரிச்சாங்க. வாக்குமூலத்தைப் பதிவு செய்துவிட்டுச் சென்றனர்.

போலீஸார் எங்களிடம் பாகுபாடு காட்டுகின்றனர். என்கிட்ட இதுக்கு மேல பணம் இல்லை. டாக்டர்கள் தினமும் மருந்து மாத்திரை, மெடிக்கல் செக்கப்னு எழுதிக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க என்ன பண்ணப்போறேன்னு தெரியல. அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். அரசு தரப்பிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை
மாதிரிப் புகைப்படம்

10-ம் வகுப்பு மாணவனான சாஹீம் , ``என் அக்கா வீடு பக்கத்துல இருக்கு வீட்டுல சிலிண்டர் காலியாகிடுச்சு. அதுக்காகத்தான் அங்க போனேன். ரோட்டுல கல் தூக்கி எறிஞ்சாங்க. ஒரு தெருவுக்குல ஓடினேன். என்னோட வயித்துல குண்டுபட்டு காயம் ஏற்பட்டது. ஆனா யார் சுட்டாங்கன்னு தெரியல. அந்தக் காயத்தோட அங்க இருந்து வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொன்னேன். அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல’ என்றார். வலியின் காரணமாக அவரால் சரியாகப் பேசமுடியவில்லை.

மாணவனின் சகோதரி கூறுகையில், `மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்க எங்களிடம் வசதியில்லை. என் சகோதரன் கலகக்காரன் இல்லை. எங்களுக்கு அரசு உதவி கிடைக்குமா? கிடைக்காதான்னு கூட தெரியல’ என்றார் வேதனையோடு.